3000 ஆண்டு பழமையான குதிரையின் எலும்புக்கூடு; எகிப்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் புதிய தகவல்கள்

கெய்ரோ: எகிப்தின் நைல் நதியின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள கோட்டையில் 3000 ஆண்டுகள் பழமையான குதிரையின் முழுமையான எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எகிப்தின் பெஹெய்ரா மாகாணத்தின் டெல் அல்-அப்கெய்ன் பகுதியில் அக்ழாய்வு நடந்தது. புதிய பேரரசு காலத்தைச் சேர்ந்த இந்த கோட்டை, எகிப்தின் மேற்கு எல்லையை லிபிய பழங்குடியினரின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

கோட்டைக்குள் இளம் வயதுடைய ஆண் குதிரையின் முழுமையான எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

குதிரையின் உடல் அமைக்கப்பட்ட விதமும், தலை வைக்கப்பட்டிருந்த முறையும், அது திட்டமிட்டு மரியாதையுடன் புதைக்காட்டுவதை சுட்டிக்காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அருகில் கிடைத்த அல்பாஸ்டர் மற்றும் சுண்ணாம்புக்கல் பொருட்கள், தேருக்குப் பயன்படுத்தப்பட்ட பகுதிகளாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

பண்டைய எகிப்தில் குதிரைகளின் எலும்புகள் முழுமையான நிலையில் கிடைப்பது மிகவும் அரிது என்பதால், இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக தொல்லியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குதிரைகள் அக்காலத்தில் படையில் முக்கிய பங்கு வகித்தன.

அகழாய்வில் மன்னர் ராமெசஸ் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டும், அவரது வாரிசான மெர்னெப்தா மன்னரின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மெர்னெப்தாவின் கல்வெட்டில் அவரது வலிமை, பாலைவனம் மற்றும் புயலுடன் தொடர்புடைய கடவுளாக சேத் உடன் ஒப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் சரணடைந்த தோற்றத்தில் காணப்படும் லிபிய பழங்குடியினத்தைச் சேர்ந்த கைதி ஒருவரின் உருவம் பொறிக்கப்பட்ட கல் கல்வெட்டின் பகுதியும் கிடைத்துள்ளது. இது அந்த கோட்டை அப்பகுதியில் நடைபெற்ற ராணுவ மோதல்களுடன் தொடர்புடையதாக இருந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரமாக கருதப்படுகிறது.

கோட்டைக்குள் வீடுகள், தானிய சேமிப்பு கிடங்குகள், உணவு தயாரிக்கும் மண் அடுக்குகள், கிணறுகள், மண்பாண்டங்கள், கருவிகள் மற்றும் ஆபரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த கோட்டை வெறும் ராணுவ மையமாக மட்டுமின்றி , வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் வசித்த குடியிருப்புப் பகுதியாகவும் செயல்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

3000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திய ராணுவத்தில் குதிரைகளின் பங்கு, வீரர்களின் வாழ்க்கை மற்றும் அண்டை லிபிய பழங்குடியினருடனான மோதல்கள் குறித்து புதிய தகவல்களை இந்த அகழாய்வு வெளிக்கொண்டு வந்துள்ளது.

Advertisement