அமெரிக்காவின் செயலை ஏற்க முடியாது: வெளியுறவுத்துறை அமைச்சகம் காட்டம்

புதுடில்லி: நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தில் இருந்து இந்திய நிறுவனங்களை அமெரிக்கா சஸ்பெண்ட் செய்ததை ஏற்க முடியாது என்று வெளியுறவுத்துறை செயலர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது; இந்திய நிறுவனங்கள் மீதான அமெரிக்க நடவடிக்கையை பற்றி தெரிய வந்துள்ளது. நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் (PERM) திட்டம் என்பது ஹெச்1பி விசா முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஏற்கனவே உள்ள ஹெச்1பி விசா கால அவகாசத்தையோ, அதனை வைத்திருப்பவர்களையோ நேரடியாகப் பாதிக்காது. ஆனால், பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் தகுதியான ஊழியர்களின் கிரீன் கார்டு செயல்முறையில் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம்.

இருநாடுகளின் திறமையான ஊழியர்களால், அமெரிக்கா, இந்தியாவின் இரு பொருளாதாரங்களுக்கும் மதிப்பு சேர்க்கும். இந்தியர்களுக்கு வாய்ப்புகளுக்கு உருவாகும் போது, புதுமை, ஆராய்ச்சி தயாரிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளில் அமெரிக்க நிறுவனங்கள் பலனடைகின்றன. அமெரிக்கா எடுத்துள்ள இந்த நடவடிக்கை, இரு நாடுகளின் கூட்டு முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அமையவில்லை. இந்த விவகாரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

அமெரிக்க துணை அதிபர் கூறியுள்ள கருத்துகள் தேவையற்றவை. அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு இந்திய வல்லுநர்கள் பெரும் பங்காற்றி வருவதை அவமதிக்கும் வகையில் இருக்கிறது. சொல்லப்போனால், அமெரிக்காவின் வரலாறே பல தலைமுறை புலம்பெயர்ந்தவர்களால் வடிவமைக்கப்பட்டது தான். அவர்களின் உழைப்பு மற்றும் செயல்பாடுகள் தான், அந்நாட்டின் வளர்ச்சி பெரும் பங்காற்றியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement