போர் விமானத்தை இயக்கிய முதல் ராணி தாய்லாந்தின் 'பைலட் குயின்'
பாங்காக்: தாய்லாந்தின் சூரத் தானி நகரில் கிரீபென் போர் விமானத்தை அந்நாட்டு தாய்லாந்து ராணி சுதிதா,48, முதல்முறையாக தனியாக இயக்கி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், போர் விமானத்தை இயக்கிய உலகின் முதல் ராணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
போர் விமானத்தை வெற்றிகரமாக இயக்கிய பிறகு, தாய்லாந்து அரசர் மஹா வச்சிரலாங்கோன் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றார். அப்போது, 'கிரீபென் ஆர்டர் கோல்டன் பேட்ச்' வழங்கினார்.
2010ம் ஆண்டு முதல் ராணி சுதிதா விமானியாக உள்ளார். செஸ்னா டி-41, பைலடஸ் பிசி-9 ஆகிய விமானங்களில் கிட்டத்தட்ட 1,188 மணி நேரங்களுக்கும் மேல் பறந்த அனுபவம் கொண்டுள்ளார். விமானப் பணியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 2019ல் தாய்லாந்து அரசர் மஹா வச்சிரலாங்கோனை திருமணம் செய்து கொண்டார்.
அரச குடும்பத்தில் இணைவதற்கு முன்பாக விமானப் போக்குவரத்து மற்றும் ராணுவப் பயிற்சிகளைப் பெற்றுள்ளார். விமானத் துறையில் இவரது ஈடுபாட்டைக் கௌரவிக்கும் வகையில் 'பைலட் குயின்' என்றும் இவரை அழைப்பதுண்டு.
இவர், காலசாரம் மற்றும் கைவினைப் பொருள் தயாரிப்பில் ஆர்வம் கொண்டவர். வெளிநாடு மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, தாய் சில்க்ஸ் போன்ற பாரம்பரிய தயாரிப்பு ஆடைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார்