இரவில் சுற்றுலா படகு இயக்கம் உரிமையாளர்கள் மீது வழக்கு
புதுச்சேரி: இரவில் படகு இயக்கப்பட்டதால் உரிமையாளர்கள் மீது காடலோர காவல் படை போலீசார் வழக்கு பதிந்தனர்.
தேங்காய்த்திட்டு, முருங்கப்பாக்கம், வம்பாகீரப்பாளையம், பாண்டி மெரினா, அரிக்கன்மேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா படகுகள், சுற்றுலாத்துறை அனுமதியுடன் இயக்கப்பட்டு வருகிறது.
படகுகளை மாலை 6:00 மணிக்கு மேல் இயக்கக் கூடாது என, தடையுள்ளது. கடந்த 1ம் தேதி மாலை 6:30 மணிக்கு மேல் கடலுக்கு ஒரு படகில் சுற்றுலா பயணிகள் சென்றனர். கடலோர காவல்படை போலீசார் அந்த படகு குறித்து விசாரித்தனர்.
அது, தேங்காய்த்திட்டு பகுதியை சேர்ந்த போட் கம்பெனிக்கு சொந்தமான படகு என்பது தெரியவந்தது. அந்த படகின் லைசன்ஸ் காலம் முடிவடைந்து விட்டதாகவும், அதனை புதுப்பிக்க கொடுத்துள்ளதாக படகு ஓட்டுனர் தெரிவித்தார்.
தடையை மீறி இரவில் படகை இயக்கிய படகு கம்பெனி உரிமையாளர்கள் மால்வினோ பேட்ரிக், சஜன்ராஜ் ஆகியோர் மீது கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.