ரீல்ஸ்க்கு மயங்கி ஆளுங்கட்சிக்கு மக்கள் ஓட்டுப்போட்டனர்: இபிஎஸ்

13

சென்னை: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவு தொடர்பாக அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

இந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சியோ பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்டது. இந்த இடைத் தேர்தலில் ஆளும் தவெக பண பலம், அதிகார பலம், ஆள் பலத்துடன் அனைத்து அமைச்சர்களையும்களம் இறக்கியது. அதிமுகவுக்கு துரோகம் இழைத்தவர்களும், முதுகில் குத்தியவர்களும் எதிர்த்தனர். தோல்வி உறுதி என்பதை உணர்ந்த தவெக வாக்காளர்களுக்கு பல்வேறு ஆசை வார்த்தைகளையும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையும் அளித்தது. ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதிகார துஷ்பிரயோகம் செய்ததது. தாராபுரம் வேட்பாளர் மீதும், தொண்டர்கள் மீதும் பொய் வழக்கு புணைந்தது. அதிமுக நிர்வாகிகள் பலரை அச்சுறுத்தி த.வெ.க-வில் இணைத்து, குறுக்கு வழியில் வெற்றி காண பல்வேறு யுக்திகளைக் கையாண்டது.

'அரை மணி நேரம் பேசினாலே கொத்துப் புரோட்டோ' என்று வீர வசனம் பேசிய முதல்வர் விஜய், தெருத் தெருவாக அலைந்து விசில் ஊதவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். தேர்தல் விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி இரண்டு தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டதுடன், குற்றவாளியுடன் ரேக்ளா மாட்டு வண்டியில் வலம் வந்தார். ஜனநாயகப் படுகொலை செய்து ஆளும் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இது, அதிகார பலத்திற்கும், பணநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி.

தீர்ந்துபோன சக்தி என்றும், மற்றும் பலர் என்றும் நம்மை கேலி செய்தவருக்கு, இந்த இடைத் தேர்தல் மரண பயத்தைக் காட்டியிருக்கிறது. அதிமுக கோட்டையில் நுழைந்துவிட்டதாக தவெக நினைக்கலாம். ஆனால், இது இடைக்கால வெற்றி மட்டுமே. இந்த தற்காலிக வெற்றியைக் கொண்டு அதிமுகவை அழித்துவிடலாம் என்று யாரும் கனவு காண வேண்டாம். ரீல்ஸ் ஆட்சியில் ரீல்ஸ்களில் மயங்கி மக்கள் ஆளும் கட்சிக்கு ஒட்டுப்போட்டனர். இந்தத் தேர்தல் வெற்றியால் அதிமுக ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தும், இரண்டு தொகுதிகளிலும் நமக்கு நல்ல ஓட்டு கிடைத்திருக்கிறது. நான் முதல்வரான காலத்தில் சந்தித்த பிரச்சனைகள் எக்கச்சக்கம். இந்த சோதனையையும் முறியடிப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.

Advertisement