கைது செய்யும் அதிகாரம் ஜி.எஸ்.டி., அதிகாரிகளிடம் பறிப்பு; தொழில் துறையினர் வரவேற்பு
சென்னை: ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ் தொழில் துறையினரை கைது செய்ய, அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை ரத்து செய்ய, ஜி.எஸ்.டி., கவுன்சில் ஒப்புதல் அளித்திருப்பது, தொழில் செய்பவர்கள் மீது மத்திய அரசு வைத்துள்ள நம்பிக்கையை காட்டுவதாக அமைந்துள்ளது.
ஜி.எஸ்.டி., சட்டத்தில், வரி ஏய்ப்பு செய்பவர்களை கைது செய்யும் அதிகாரம், அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இதை, சிலர் தவறாக பயன்படுத்துவதாக, மத்திய அரசுக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்தே, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், டில்லியில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், தொழில்முனைவோரை கைது செய்ய வழங்கப்பட்ட அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆடிட்டர் எஸ்.சுந்தர்ராமன் கூறியதாவது: ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ் வரி ஏய்ப்பு செய்பவர்களின் வங்கி கணக்கை முடக்கம் செய்வது, சொத்துக்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட, கடும் நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரம் அதிகாரிகளுக்கு உள்ளது. கைது என்பது கடைசி வாய்ப்பு. பல இடங்களில் கைது நடவடிக்கை தான் அதிகம் உள்ளது.
உதாரணமாக, 'கேமரா, வீடியோ' எடுக்கும் தொழிலில் உள்ள ஒரு நிறுவனம், திருமண நிகழ்ச்சிக்கு எவ்வளவு செலவாகும் என்ற உத்தேச அறிக்கையில், 2 லட்சம் ரூபாய் செலவாகும் என்று வழங்குவர். பின், விலை குறைப்பு செய்து, 50,000 ரூபாய்க்கு செய்வர்.
ஆனால், அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது, 'எஸ்டிமேட்' அறிக்கையை வைத்து மட்டும் அதிக வருவாய் ஈட்டி, வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கருதி நடவடிக்கை எடுப்பர். இங்கு, வருவாய், வரி உள்ளிட்டவை தொடர்பாக முழு விசாரணை மேற்கொள்ளப்பட்டு, முடிவு எடுக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி., என்பது நுகர்வோரிடம் இருந்து வணிகர்கள், நிறுவனங்கள் பணத்தை வசூல் செய்து, அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். நுகர்வோரிடம் வசூலித்து விட்டு, வரியை செலுத்தாமல் தாங்களே எடுத்து கொள்கின்றனர். இதற்காக தான் கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
தற்போது, தொழில் செய்வதை எளிதாக்கும் வகையில், தொழில் செய்பவர்கள் மீது மத்திய அரசு வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக, தொழில் துறையினரை கைது செய்ய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை ரத்து செய்ய, ஜி.எஸ்.டி., கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் கூறுகையில், ''ஜி.எஸ்.டி., சட்டத்தில் கைது செய்யும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பதால், வணிகர்கள் மற்றும் பொருட்களை உற்பத்தி செய்பவர்களையும் கைது செய்வதாக மிரட்டி, பணம் பறிப்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விடும்,'' என்றார்.
'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் வாசுதேவன் கூறியதாவது: ஜி.எஸ்.டி., வரி செலுத்துவதில் தவறு இருப்பதாக கருதி, தொழில்முனைவோர் கைது செய்யப்பட்டால், அவரின் தொழில் பாதிக்கப்படும்.
தொடர்ந்து தொழிலில் ஈடுபட முடியாத சூழல் நிலை ஏற்படும். தற்போது, கைது செய்ய விலக்கு அளிக்கப்பட்டிருப்பது தொழில்முனைவோர் தங்களின் வாதங்களை எடுத்துரைக்க வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
இணைய உலகை கைப்பற்ற அமெரிக்க சதி? எலான் மஸ்க் குற்றச்சாட்டின் கொடூர பின்னணி
-
வெளிநாட்டு ஊழியர்கள் ஒப்பந்த அடிமைகளா? அமெரிக்க துணை அதிபருக்கு இந்தியா கண்டனம்
-
ஜேஎன்யு பல்கலை பாலியல் புகார்: பேராசிரியர் பணியில் இருந்து காங்., - எம்.பி., நீக்கம்
-
அனுவாவி சுப்பிரணியசுவாமி கோவில் 'ரோப் கார்' திட்டம் கைவிடப்பட்டது: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்
-
த.வெ.க., கூட்டணியில் கம்யூ., கட்சிகள் நீடிக்குமா? வரும் அக்.,12ல் ஆலோசனை
-
ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்