ஜேஎன்யு பல்கலை பாலியல் புகார்: பேராசிரியர் பணியில் இருந்து காங்., - எம்.பி., நீக்கம்
புதுடில்லி: பாலியல் துன்புறுத்தல் குறித்து 11 மாணவியரின் புகாரைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள ஜே.என்.யு., எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலையின் பேராசிரியரும், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எம்.பி.,யுமான அங்கோம்ச்சா பிமோல் அகோய்ஜாம். 59, பணிநீக்கம் செய்யப்பட்டார்.
டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலையில், சமூக அறிவியல் பள்ளியின் கீழ் செயல்படும் சமூக அமைப்புகள் ஆய்வு மையத்தில் பேராசிரியராக பணியாற்றியவர் அங்கோம்ச்சா பிமோல் அகோய்ஜாம்.
மணிப்பூரைச் சேர்ந்த இவர், அங்குள்ள இன்னர் மணிப்பூர் லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.,யாகவும் உள்ளார். கடந்த மே மாதம் இவர் மீது பல்கலை உள்விவகாரக் குழுவிடம், 11 மாணவியர் பாலியல் புகார் தெரிவித்தனர். பாடம் நடத்தும் போது, தவறான மற்றும் ஆபாச கருத்தில் பேசியதாகவும், ஒரு சில மாணவியரை பல்கலை வளாகத்தில் உள்ள தன் வீட்டிற்கு இரவில் வரவழைத்து, பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதில் குற்றஞ்சாட்டப்பட்டது. தேர்வில் அதிக மதிப்பெண்கள் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறியும், மிரட்டியும் சீரழித்ததாக மாணவியர் புகார் கூறியிருந்தனர்.
இது தொடர்பாக நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பல்கலை வளாகத்தில் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் கமிஷனும் பல்கலை நிர்வாகத்துக்கு கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், 'பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் அளித்தும் விசாரணை நடத்தாதது ஏன்? இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, கூறப்பட்டது.
இதையடுத்து, பேராசிரியர் அங்கோம்ச்சா பிமோல் மீது பாலியல் புகாரளித்த 11 மாணவியரிடம், பல்கலை உள்விவகாரக் குழு விசாரணை நடத்தியது.
சமூக அறிவியல் பள்ளியில் உள்ள பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில், அங்கோம்ச்சா பிமோல் அகோய்ஜாம் மீதான புகார் உறுதியானது.அவருக்கு கடுமையான தண்டனை வழங்க, பல்கலை நிர்வாகத்துக்கு உள்விவகாரக் குழு பரிந்துரைத்தது.
இதையடுத்து, அங்கோம்ச்சா பிமோல் அகோய்ஜாம் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இது தொடர்பான ஜவஹர்லால் நேரு பல்கலை துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட் வெளியிட்டுள்ள உத்தரவில், 'பாலியல் புகார் தொடர்பாக மாணவியர் அளித்த புகாரின் அடிப்படையில், பல்கலை உள்விவகாரக் குழு விசாரணை நடத்தியது. இதில், பேராசிரியர் அங்கோம்ச்சா பிமோல் தவறு செய்தது உறுதியானது.'முறையான நடைமுறைகளை பின்பற்றியும், கிடைக்கப்பெற்ற உண்மைகள் மற்றும் உள்விவகாரக் குழுவின் அறிக்கையின் அடிப்படையிலும் அவர் பணிநீக்கம் செய்யப்படுகிறார்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
நாட்டின் பாதுகாப்பில் சமரசம் கிடையாது : ஸ்டார்லிங்க் விவகாரத்தில் ஜோதிராதித்ய சிந்தியா உறுதி
-
வெளிநாட்டு ஊழியர்கள் ஒப்பந்த அடிமைகளா? அமெரிக்க துணை அதிபருக்கு இந்தியா கண்டனம்
-
அனுவாவி சுப்பிரணியசுவாமி கோவில் 'ரோப் கார்' திட்டம் கைவிடப்பட்டது: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்
-
கைது செய்யும் அதிகாரம் ஜி.எஸ்.டி., அதிகாரிகளிடம் பறிப்பு; தொழில் துறையினர் வரவேற்பு
-
த.வெ.க., கூட்டணியில் கம்யூ., கட்சிகள் நீடிக்குமா? வரும் அக்.,12ல் ஆலோசனை
-
ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்