வெளிநாட்டு ஊழியர்கள் ஒப்பந்த அடிமைகளா? அமெரிக்க துணை அதிபருக்கு இந்தியா கண்டனம்
புதுடில்லி: இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர்களை ஒப்பந்த அடிமைகள் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியதற்கு, 'அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கிய பங்காற்றி வருவது இந்திய நிபுணர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது' என வெளியுறவு அமைச்சகம் பதிலடி தந்துள்ளது.
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதற்கான கிரீன் கார்டு பெற பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று 'பெர்ம்' எனப்படும், தொழிலாளர் சான்றிதழ் நடைமுறை. இதை தங்களின் தகுதி உள்ள ஊழியருக்காக நிறுவனங்கள் விண்ணப்பித்து நிறைவு செய்ய வேண்டும்.
இந்த 'பெர்ம்' நடைமுறையில், ஒரு வெளிநாட்டு ஊழியரை பணியமர்த்துவதன் மூலம் அமெரிக்க தொழிலாளர்களின் ஊதியமோ அல்லது அவர்களின் வேலைவாய்ப்புகளோ எந்த வகையிலும் பாதிக்காது என்பதை நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும். இந்த திட்டத்தை பயன்படுத்தி வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்துவதில் முறைகேடுகள் நடந்ததாக அமெரிக்க அரசு விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், 'பெர்ம்' திட்டத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு நிறுவனங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான, 'காக்னிசன்ட், இன்போசிஸ், டி.சி.எஸ்., விப்ரோ, எச்.சி.எல்.,' ஆகிய ஐந்து நிறுவனங்களும், அமெரிக்காவின் 'மைக்ரோசாப்ட்' உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த பட்டியலில் உள்ளன.
இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கூறியதாவது: 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் கடந்த ஆண்டு, 6,000 அமெரிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதே நேரத்தில், 6,300 எச்-1.பி., விசாக்களையும், 3,000 கிரீன் கார்டுகளையும் பயன்படுத்தியுள்ளது.
இதைக் கணக்கிட்டுப் பார்த்தால், பணிநீக்கம் செய்யப்பட்ட ஒவ்வொரு அமெரிக்க ஊழியருக்கும் பதிலாக, ஒன்றரை வெளிநாட்டு ஒப்பந்த அடிமைகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வெளிநாட்டு ஊழியர்கள், அமெரிக்கர்களைவிட ஆண்டுக்கு 45 லட்சம் ரூபாய் குறைவாக சம்பாதிக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களில் மிக அதிகமானோர் இந்தியர்கள். இந்நிலையில், வெளிநாட்டு ஊழியர்களை ஒப்பந்த அடிமைகள் என வான்ஸ் கூறியதற்கு நம் வெளியுறவு அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய நிபுணர்கள் உயர் கல்வி பெற்றவர்கள், சிறந்த திறன்களை கொண்டவர்கள். அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் அவர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அவர்களின் பங்களிப்புகளை புறக்கணிக்கும் வகையில் துணை அதிபர் வான்ஸின் கருத்து அமைந்துள்ளது.
அமெரிக்காவின் வரலாறே பல தலைமுறைகளாக அங்கு குடியேறியவர்களின் உழைப்பு, முதலீடு மற்றும் கண்டுபிடிப்புகளால் உருவானது என்பதை மறக்கக் கூடாது. காலனித்துவ கால பின்னணி கொண்ட சொற்களை பயன்படுத்துவது மிகவும் புண்படுத்தும் வகையில் உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
நாட்டின் பாதுகாப்பில் சமரசம் கிடையாது : ஸ்டார்லிங்க் விவகாரத்தில் ஜோதிராதித்ய சிந்தியா உறுதி
-
ஜேஎன்யு பல்கலை பாலியல் புகார்: பேராசிரியர் பணியில் இருந்து காங்., - எம்.பி., நீக்கம்
-
அனுவாவி சுப்பிரணியசுவாமி கோவில் 'ரோப் கார்' திட்டம் கைவிடப்பட்டது: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்
-
கைது செய்யும் அதிகாரம் ஜி.எஸ்.டி., அதிகாரிகளிடம் பறிப்பு; தொழில் துறையினர் வரவேற்பு
-
த.வெ.க., கூட்டணியில் கம்யூ., கட்சிகள் நீடிக்குமா? வரும் அக்.,12ல் ஆலோசனை
-
ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்