நாட்டின் பாதுகாப்பில் சமரசம் கிடையாது : ஸ்டார்லிங்க் விவகாரத்தில் ஜோதிராதித்ய சிந்தியா உறுதி

- நமது டில்லி நிருபர் -

செயற்கைகோள் வாயிலாக இணைய சேவை வழங்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவிலும் கால்பதிக்க தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், இதற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. ஆனால், பாதுகாப்பு அம்சம் என்ற பெயரில் அனுமதி தராமல் இந்திய அரசு மறுப்பதாக எலான் எலான் மஸ்க் தெரிவித்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் விவாதம் எழுந்த நிலையில், நேற்று எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இந்திய அரசின் சட்டங்களை மதிக்கும்போது ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி தராதது ஏன்? இந்தியாவின் பாஸ் அம்பானியா என கேள்வி எழுப்பி இருந்தார்.

அம்பானி, அதானிக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது என அடிக்கடி குற்றம்சாட்டி வரும் ராகுல், எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அம்பானி தவிர்த்து மற்றொரு நபர் பற்றி அவருக்கு விரைவில் தெரியவரும் எனக் கூறியிருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. செயற்கைக்கோள் வாயிலான இணைய சேவை என்பது நாட்டின் பாதுகாப்பு சார்நத விஷயத்துடன் தொடர்புடையது. இதில் கவனமுடன் இருக்க வேண்டும் என கூறுகின்றனர்.

இது தொடர்பாக ராணுவ பெண் அதிகாரி ஒருவர் கூறுகையில், ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் இணைய சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அப்போது அந்நாட்டிற்கு ஸ்டார்லிங்க் வாயிலாக உதவுவதற்கு எலான் மஸ்க் முன்வந்தார். ஆனால், கிரீமியா பகுதியில் அந்த சேவை வழங்க மறுத்துவிட்டார். அப்படி வழங்கினால் போர்ப்பதற்றத்தை அதிகரிக்கும் என்றார்.

இந்தியாவில் போர் நடக்கும் நேரம் மற்றும் தேசிய அவசர நிலையின் போது, பிரச்னையின்போது, தொலைத்தொடர்பு குறித்து முக்கிய முடிவு எடுக்க, ஆயிரம் கிலோ மீட்டர் அப்பால் அமர்ந்திருக்கும் வெளிநாட்டினை சார்ந்திருக்க வேண்டுமா?வேகமான வைபை விட நாட்டின் பாதுகாப்பு முக்கியம்.தொழில்நுட்பம் சர்வதேச அளவில் இருக்கலாம். ஆனால், தேசிய பாதுகாப்பு அப்படி இருக்க முடியாது . இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் டில்லியில் நடந்த மொபைல் காங்கிரஸ் 2026 மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா பேசியதாவது:

சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை பற்றியே அதிக உரையாடல்கள் நடக்கின்றன. ஆனால் இந்தியாவில் செயற்கைகோள் தகவல் தொடர்பு சேவைக்காக மூன்று நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்களது பாதுகாப்புத் தேவைகள் மற்றும் தகுதி நிபந்தனைகளை தனித்தனியாக பூர்த்தி செய்த பிறகே தங்களது செயல்பாடுகளைத் துவங்க முடியும். இந்தியாவில் தற்போது 110 கோடி பிராட்பேண்ட் இணைப்புகள் உள்ளன. நாட்டின்99.98 சதவீத மாவட்டங்களில் 5ஜி சேவை வெற்றிகரமாக கொண்டு சேர்க்கப்பட்டன. விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்வியில் செயற்கைக்கோள் மற்றும் ஏஐ மாடல்கள் திறம்பட பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போதெல்லாம் காங்கிரஸ் எந்தப் பக்கம் செல்கிறது என்பது அந்தக் கட்சிக்கே தெரியவில்லை. சாட்டிலைட் இணைய சேவை லைசென்ஸ் விவகாரத்தில் அதன் நிலைப்பாடு குழப்பமான வகையில் உள்ளது.

முதலில் இந்த லைசென்ஸ் வெறும் ஒரு நிறுவனத்திற்கு மட்டும் வழங்கவில்லை. ஸ்டார்லிங்க் உட்பட மூன்று நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்த வகையிலும் ஏகாதிபத்தியத்தை இந்தியா அனுமதிக்காது.

லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் பாதுகாப்பு அம்சங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டால், அதன் பின் சேவைகளை தொடங்க முடியும். இது ஸ்டார்லிங்க் நிறுவுனம் மட்டுமின்றி, லைசென்ஸ் பெற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். இது தான் மத்திய அரசின் நிலைப்பாடு. இது வழக்கமான நடைமுறையே. எந்த வகையிலும், நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement