ஐ.எஸ்.எல்., கால்பந்து இன்று ஆரம்பம்

பெங்களூரு: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் 13வது சீசன் இன்று துவங்குகிறது.
இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில், 2014 முதல் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் நடத்தப்படுகிறது. இதன் 13வது சீசன், இன்று பெங்களூரு கன்டீவ்ரா மைதானத்தில் துவங்குகிறது. நடப்பு சாம்பியன் ஈஸ்ட் பெங்கால், சென்னை, மும்பை, கேரளா, வடகிழக்கு யுனைடெட் உட்பட 13 அணிகள் பங்கேற்கின்றன.
கடந்த ஆண்டு புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்ற அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது. இதன்படி, ஈஸ்ட் பெங்கால், மோகன் பகான் அணிகள் தலா 26 புள்ளி பெற்றன. இருப்பினும் அதிக கோல் அடித்ததன் அடிப்படையில் ஈஸ்ட் பெங்கால் அணி சாம்பியன் ஆனது. கடைசி இடம் (14) பெற்ற முகமதன் அணி, வெளியேற்றப்பட்டது. தவிர ஜாம்ஷெட்பூர் அணி தொடரில் இருந்து விலகியது. புதிய வரவாக சர்ச்சில் பிரதர்ஸ் அணி இணைந்துள்ளது. இன்று நடக்கும் முதல் மோதலில் பெங்களூரு, டில்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த அணியில் போர்ஜா மார்டினஸ் (ஸ்பெயின்), சாண்ட்ரோ எம்பாலோ (போர்ச்சுகல்), மானுயல் டி லிரியான்டோவுடன் (அர்ஜென்டினா), கடைசி தொடரில் களமிறங்கும் சீனியர் வீரர் இந்தியாவின் சுனில் செத்ரி, இந்திய அணியின் புதிய நட்சத்திர வீரர் ரியான் வில்லியம்சும் பலம் சேர்க்கின்றனர்.
போட்டி எப்படி
இம்முறை போட்டிகள், வழக்கமாக உள்ளூர், வெளியூர் அடிப்படையில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, ஐ.எஸ்.எல்., ஷீல்டு தட்டிச் செல்லும். தவிர, 'டாப்-6' அணிகள் பைனல் (2027, மே) செல்வதற்கான 'பிளே ஆப்' சுற்றில் பங்கேற்கும்.

சென்னை-கோவா மோதல்
ஐ.எஸ்.எல்., தொடரில் இருமுறை கோப்பை வென்ற அணி சென்னை (2015, 2017-18). கடந்த சீசனில் பட்டியலில் 13வது இடம் (13 போட்டி, 2 வெற்றி, 3 'டிரா', 8 தோல்வி) பிடித்தது. இன்று கோவாவில் நடக்கும் மோதலில், சென்னை அணி, கோவாவை எதிர்கொள்கிறது.

163 போட்டி
கடந்த சீசனில் 91 போட்டிகள் நடந்தன. இம்முறை மொத்தம் 163 போட்டிகள் நடக்க உள்ளன. 68 சதவீத போட்டிகள் வார இறுதி நாட்களில் நடக்க உள்ளன.

Advertisement