ஆஸி., திணறல் ஆட்டம்: தென் ஆப்ரிக்க 'வேகங்கள்' அபாரம்

டர்பன்: டர்பன் டெஸ்டில் தென் ஆப்ரிக்க வேகங்கள் மிரட்ட, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 187/6 ரன் எடுத்திருந்தது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நேற்று டர்பனில் துவங்கியது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட், நிக் மேடின்சன் ஜோடி துவக்கம் தந்தது. ஹெட் 9 ரன் எடுத்த நிலையில் வியான் முல்டர் 'வேகத்தில்' வெளியேறினார். 33 பந்து தாக்குப்பிடித்த மேடின்சன் (0), யான்சென் பந்தில் போல்டாகி திரும்பினார். லபுசேன், ஸ்டீவ் ஸ்மித் இணைந்து போராடினர்.
லபுசேன் 37 ரன் எடுத்த நிலையில் முல்டர் பந்தில் வீழ்ந்தார். மறுபக்கம் தன் பங்கிற்கு ஸ்மித்தை (25) அவுட்டாக்கினார். அடுத்து வந்த அலெக்ஸ் கேரி (14), வெப்ஸ்டர் (4) விரைவில் திரும்ப, ஆஸ்திரேலிய அணி 124/6 ரன் என திணறியது. அடுத்து ஜோடி சேர்ந்த மாட் ரென்ஷா, கம்மின்ஸ் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தினர்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 65.2 ஓவரில் 187/6 ரன் எடுத்திருந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்னதாக முடிவுக்கு வந்தது. ரென்ஷா (46), கம்மின்ஸ் (33) அவுட்டாகாமல் இருந்தனர்.
தென் ஆப்ரிக்கா சார்பில் யான்சென், முல்டர், நோர்க்கியா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

மேடின்சன் மனஉறுதி
ஆஸ்திரேலிய அணி துவக்க வீரர் நிக் மேடின்சன் 34. கடைசியாக 2016ல் 3 டெஸ்டில் பங்கேற்றார். கடந்த 2025, ஏப்ரல் மாதம் புற்று நோய் பாதித்த இவரது விதைப்பை, ஆப்பரேஷன் செய்து அகற்றப்பட்டது. 7 வாரத்திற்குப் பின் நுரையீரல், கழுத்து பகுதிக்கு புற்றுநோய் பரவியது.
இதற்காக 'கீமோதெரபி' சிகிச்சை எடுத்துக் கொண்டார். மனம் தளராமல் போராடி மீண்ட மேடின்சன், 579 நாள் சிகிச்சைக்குப் பின், நேற்று டர்பன் டெஸ்டில் சேர்க்கப்பட்டார்.
தவிர, 10 ஆண்டுக்குப் பின், மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார். கடைசியாக 2016, டிசம்பரில் பாகிஸ்தானுக்கு எதிராக மெல்போர்ன் டெஸ்டில் பங்கேற்றார்.

33 பந்து
ஆஸ்திரேலிய டெஸ்ட் வரலாற்றில் அதிக பந்துகள் சந்தித்து 'டக்' அவுட்டான துவக்க வீரர் ஆனார் மேடின்சன். இவர் நேற்று, 33 பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் திரும்பினார்.

10,945 ரன்
டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்த ஆஸ்திரேலிய வீரர்களில் ஸ்டீவ் வாக்கை (10,927) முந்தி, மூன்றாவது இடம் பிடித்தார் ஸ்மித். இவர், 126 டெஸ்டில் 10,945 ரன் எடுத்துள்ளார். முதல் இரு இடத்தில் பாண்டிங் (13,378), பார்டர் (11,174) உள்ளனர்.

Advertisement