இந்திய நம்பிக்கையை தகர்த்த ஹோப்: 252 ரன்னை விரட்டியது வெஸ்ட் இண்டீஸ்

ராஞ்சி: ராஞ்சி 'டி-20' போட்டியில் கேப்டன் ஷாய் ஹோப் சதம் விளாச, வெஸ்ட் இண்டீஸ் அணி 252 ரன்னை 'சேஸ்' செய்து வென்றது. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. சஞ்சு சாம்சன் (82) விளாசல் வீணானது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 5 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது. நேற்று 2வது போட்டி ராஞ்சியில் (ஜார்க்கண்ட்) நடந்தது.
இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. 'லெவனில்' வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் இடம் பெறவில்லை. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
சாம்சன் 82 ரன்
இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா நல்ல துவக்கம் தந்தனர். ராஸ்டன் சேஸ் வலையில் அபிஷேக் (20) சிக்கினார். பின் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை, 'சேட்டன்' சாம்சன் சிதறடித்தார்.
ஷெப்பர்டு ஓவரில் வரிசையாக இரு பவுண்டரி அடித்த சாம்சன், 21 பந்தில் அரைசதம் கடந்தார். 'பவர்பிளே' (முதல் 6 ஓவர்) இந்தியா 79/1 ரன் குவித்தது.
சேஸ் பந்தில் இஷான் (43 ரன், 22 பந்து, 6x4, 2x6) வெளியேறினார். சேஸ் 'சுழலில்' ஷிவம் துபே (7) போல்டானார். ஸ்பிரிங்கர் பந்தை துாக்கி அடித்தார் சாம்சன். இம்முறை கமில் பூரன் கச்சிதமாக பிடிக்க, 82 ரன்னில்(41 பந்து, 9x4, 4x6) அவுட்டானார். ஏற்கனவே அகில் ஹூசைன் பந்தில் சாம்சன் 6 ரன்னில் கொடுத்த 'கேட்ச்'சை பூரன் நழுவவிட்டார். இதை பயன்படுத்தி, கூடுதலாக 76 ரன் சேர்த்தார்.
திலக் வர்மா விளாசல்
கடைசி கட்டத்தில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், திலக் வர்மா ரன் மழை பொழிந்தனர். ரொமாரியோ ஷெப்பர்டு (16.2) பந்தை சிக்சருக்கு அனுப்பினார் ஷ்ரேயாஸ். இந்த ஓவரின் 4வது பந்தை வீசிய பின், கால் பிடிப்பு காரணமாக ஷெப்பர்டு வெளியேறினார். எஞ்சிய இரு பந்தை பாவெல் வீசினார். இதில் ஷ்ரேயாஸ் ஒரு சிக்சர் அடித்தார்.
ஸ்பிரிங்கர் ஓவரில் (18) ஷ்ரேயஸ் (6,4), திலக் வர்மா (4,4) விளாச, 21 ரன்கிடைத்தன. ஸ்பிரிங்கர் வீசிய கடைசி ஓவரில் திலக் வர்மா 'ஹாட்ரிக்' சிக்சர் அடித்தார். ஷ்ரேயஸ் 40 ரன்னுக்கு (18 பந்து, 3X4, 3X6) அவுட்டானார்.
இந்திய அணி 20 ஓவரில் 249/5 ரன் குவித்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் 244/4 ரன் எடுத்திருந்தது. திலக் வர்மா (44 ரன், 18 பந்து, 3X4, 3X6), நமன் திர் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
கேப்டன் ஹோப் சதம்
கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி, துவக்கத்தில் தடுமாறியது. கமில் பூரன் (4), ஹெட்மெயர் (0), ராவ்மென் பாவெல் (24) விரைவில் நடையை கட்ட, 5.1 ஓவரில் 58/3 ரன் எடுத்து தவித்தது. பின் கேப்டன் ஷாய் ஹோப், ஷெர்பேன் ரூதர்போர்டு சேர்ந்து இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் 24 பந்தில் அரைசதம் எட்டினர். இந்த சமயத்தில் குல்தீப் யாதவ் பந்தில் ரூதர்போர்டு (84 ரன், 37 பந்து, 7x4, 7x6) அவுட்டானார்.
துணிச்சலாக போராடிய ஹோப், அக்சர் படேல் பந்தை சிக்சருக்கு அனுப்பி சதம் கடந்து, நம்ப முடியாத வெற்றியை உறுதி செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவரில் 252/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஹோப் (102 ரன், 45 பந்து, 6x4, 9x6), ஷெப்பர்டு (34) அவுட்டாகாமல் இருந்தனர்.

திலக் வர்மா 5,000 ரன்
ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில், நேற்று 5,000 ரன் எட்டினார் இந்தியாவின் திலக் வர்மா. இந்த இலக்கை எட்டிய 143வது வீரர். இதில் 40+ சராசரி, 140+ 'ஸ்டிரைக் ரேட்' கொண்ட ஒரே வீரர் திலக். இவர் 175 'டி-20' போட்டியில் 5031 ரன் (சராசரி 41.57, ஸ்டிரைக் ரேட் 145.36) எடுத்துள்ளார்.

இது அதிகம்
சர்வதேச 'டி-20' அரங்கில், வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக 'பவர்பிளே'யில் (முதல் 6 ஓவர்) நேற்று இந்தியா அதிகபட்ச ஸ்கோரை (79/1) பதிவு செய்தது. முன்னதாக 2009ல் 72/0 ரன் (மும்பை, வான்கடே மைதானம்) எடுத்திருந்தது.
* வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக அதிவேக அரைசதம் (21 பந்து) அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை கோலி (2019, மும்பை) உடன் பகிர்ந்து கொண்டார் சாம்சன் (2026).
* சர்வதேச 'டி-20' அரங்கில், ஒரு ஆண்டில் 50+ சிக்சர் அடித்த வீரர்களில் (முழு உறுப்பு நாடு) இஷான் கிஷான் (51 சிக்சர், 2026) 4வது இடம் பெற்றார். முதல் 3 இடங்களில் சூர்யகுமார் (68 சிக்சர், 2022), அபிஷேக் (63, 2026; 54, 2025) உள்ளனர்.
* 'டி-20' அரங்கில் இந்தியா சார்பில் 2026ல் 311 சிக்சர், 2022ல் 289 சிக்சர் அடிக்கப்பட்டன. ஒரு ஆண்டில் மற்ற எந்த அணியும் (ஐ.சி.சி., முழு உறுப்பு நாடு) 250+ சிக்சர் அடித்தது இல்லை.

Advertisement