முல்லைவாசல் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்கு சென்னையில் நுால் வெளியிட்டு ‘சிரத்தாஞ்சலி’

சென்னை: வேத, வேதாந்த மற்றும் சமஸ்கிருத அறிஞர் முல்லைவாசல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்கு, ‘சிரத்தாஞ்சலி’ செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் ‘சிரத்தாஞ்சலி’ நுால் வெளியீட்டு விழா, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆஸ்திக சமாஜத்தில் நேற்று நடந்தது.

நுாலை, ஐ.ஐ.டி., சென்னை இயக்குநர் காமகோடி வெளியிட, முதல் பிரதியை, ‘துக்ளக்’ இதழ் ஆசிரியர் குருமூர்த்தி பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, குருமூர்த்தி பேசியதாவது:

பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது, அதன் தொடக்க நிலையில் ஒலி அலைகளின் பங்கு என்ன என்பது குறித்து அறிவியல் உலகம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.

வேதம், அறிவியல், வரலாறு, சமூகவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டால், பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்களை பெற முடியும்.

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கி, அவரது பணிகளை இடைவிடாது தொடர்ந்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சாஸ்திரிகளின் மகனும், ஐ.ஐ.டி., மும்பை பேராசிரியருமான ராமசுப்பு பேசுகையில், ‘‘நாம் பல காலமாக பல்வேறு காரியங்களை செய்து வருகிறோம்.

‘‘சில விஷயங்கள் நமக்கு புதிதாக தோன்றினாலும், அவற்றின் பின்னணியில் ஒரு நோக்கமும் நம்பிக்கையும் இருக்கின்றன. ஒவ்வொரு செயல்பாடுகளுக்கு பின்னால் ஏதோ ஒரு காரணம் இருப்பதை உணர்ந்து, நம்பிக்கையுடன் செயல்பட்டால், பல நல்ல விஷயங்களை செய்ய முடியும்,’’ என்றார்.

Advertisement