மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க சிறப்பு கடன் முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், மாணவ – மாணவியர் கல்விக்கடன் பெறுவதற்காக, சிறப்பு கடன் முகாம் நடத்தப்பட உள்ளதாக, கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாணவ – மாணவியர், உயர்கல்விக்காக கல்விக்கடன் பெரும் வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பாக, பொதுத் துறை, தனியார், கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகள் இணைந்து, கல்விக்கடன் முகாம் நடத்த உள்ளன.

இம்முகாமில், கல்விக்கடன் தேவைப்படும், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் வெளி மாவட்டங்களில் குடியிருந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் பயின்று வரும் மாணவ – மாணவியர் பங்கேற்கலாம்.

வங்கிகளில், ஏற்கனவே கல்விக்கடன் வேண்டி விண்ணப்பித்தவர்கள் மட்டுமன்றி, புதிதாக கல்விக்கடன் தேவைப்படுவோரும், இம்முகாமில் நேரடியாக பங்கேற்கலாம்.

கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ – மாணவியர், https://pmvidyalaxmi.co.in/ என்ற இணையதளத்தில், தங்களுடைய விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். கடன் முகாம் நடைபெறும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement