கூடுவாஞ்சேரி பெண் கொலை வழக்கு வடமாநில தம்பதி மீது ‘குண்டாஸ்’ பாய்ந்தது
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பதி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் வசித்து வந்த ஒடிஷாவைச் சேர்ந்த ஹயாத் நிஷா, 38, என்ற பெண், கடந்த ஆக., 2ம் தேதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, உடல் பாகங்கள் டில்லி செல்லும், ‘தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்’ ரயிலில் ஒரு ‘டிராலி பேக்’கில் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டன. அந்த ரயில் 5ம் தேதி ஆக்ராவில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, பயணியர் அளித்த புகாரை அடுத்து கண்டெடுக்கப்பட்டன.
இந்த கொலை சம்பவத்தில், ஹயாத் நிஷாவின் கள்ளக்காதலனான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தீன் லஸ்கர், 28, மற்றும் அவரது மனைவி ஒடிஷாவைச் சேர்ந்த பகாபதி மாஜி ஆகியோர், கொலையாளிகள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
மணிப்பூரில் தலைமறைவாக இருந்த தம்பதியை ஆக., 30ம் தேதி தனிப்படை போலீசார், கைது செய்தனர். பின், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தம்பதி இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜுவுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தம்பதி இருவரும், தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.