மோசடி பணத்தில் பெண்களுடன் உல்லாசம் ரூ.1.18 கோடி சுருட்டிய அம்பத்துார் நபர் கைது
ஆவடி: கேட்டரிங் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி, 1.18 கோடி ரூபாய் சுருட்டியவர் சிக்கினார். அந்த பணத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருந்தது, விசாரணையில் தெரிய வந்தது.
ஆவடியைச் சேர்ந்தவர் வேலவன், 48. இவர், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் கடந்தாண்டு ஜூன் மாதம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நான் பணியாற்றிய நிறுவனத்தின் வாயிலாக, அம்பத்துாரைச் சேர்ந்த உப்பிலி சீனிவாசன், 34, என்பவரது அறிமுகம் கிடைத்தது.
இவரது மாமனார் கேட்டரிங் செய்து வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறினார்.
அதை நம்பி, 80 லட்சம் ரூபாய் வரை அவரது வங்கி கணக்கிற்கும், ரொக்கமாகவும் கடந்த 2020 முதல் 2025ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் கொடுத்தேன்.
மேலும் எனது மகள் ஜனனி மற்றும் நண்பர்கள் கண்ணன், பிரபாகர், செல்வராஜ் மதன் ஆகியோரிடம் இருந்தும், மொத்தமாக, 1.18 கோடி ரூபாய் வரை பெற்றார்.
பின், பணத்தை திரும்பி தராமல் ஏமாற்றி தலைமறைவானார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து, பெங்களூருவில் பதுங்கி இருந்த உப்பிலி சீனிவாசனை பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில், உப்பிலி சீனிவாசன் மோசடியில் ஈடுபட்டதும், அந்த பணத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும் தெரிந்தது.
மேலும், அவர்களுக்கு நகைகள், பட்டுப்புடவைகள், பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்ததும் தெரிந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு
-
மக்கள் குறைதீர் முகாம்
-
பூட்டிய வீட்டை உடைத்து கார், நகை, பணம் திருட்டு
-
நவராத்திரி விழா தொடக்கம் வீடு, கோவில்களில் கொலு
-
போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திய 4 இளைஞர்கள் கைது
-
மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம்