வாக்காளர் பெயர் நீக்க மனுக்களுக்கு செக்!: தேர்தல் கமிஷன் அதிரடி

4

​புதுடில்லி: வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கக் கோரும் 'படிவம் 7' மனுக்களை தனிநபர் ஒருவர் மொத்தமாகத் தாக்கல் செய்வதைத் தடுக்கும் வகையில், இந்திய தேர்தல் கமிஷன் புதிய உச்சவரம்பை விதித்துள்ளது.

​வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் போது, தேவையின்றி அல்லது தவறான காரணங்களுக்காகப் பிறரது பெயர்களை நீக்கக் கோரி ஒரே நபர் மொத்தமாகப் படிவங்களை அளிப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதனால் களப்பணியாளர்களுக்கும், சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கும் தேவையற்ற சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்கும் வகையில், ஆன்லைன் மற்றும் ஆப்லைன் இரண்டிற்கும் பொருந்தும் வகையில் புதிய வழிகாட்டுதல்களைத் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

இதன்படி இனி, ​உரிமைகோரல் மற்றும் மறுப்பு கால கட்டத்தில் ஒரு தனிநபர் வாக்காளர் அதிகபட்சமாக 10 படிவங்கள் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். ஆண்டு முழுவதும் நடைபெறும் தொடர் திருத்தத்தின் போது, தனிநபர் ஒருவர் மாதத்திற்கு 5 படிவங்கள் மட்டுமே அளிக்க அனுமதிக்கப்படுவர்.

​

பொய் புகாருக்கு கடும் நடவடிக்கை:



மனுதாரரின் கையொப்பம் முறையாக இருக்க வேண்டும் எனவும், சீல் அல்லது முத்திரை வைத்து கையொப்பமிடுவதை ஏற்க முடியாது எனவும் தேர்தல் கமிஷன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மனுக்கள் மீது தேர்தல் நடத்தும் அலுவலர் உரிய விசாரணை நடத்திய பிறகே முடிவு எடுப்பார். யாரேனும் உள்நோக்கத்துடன் போலியான அல்லது தவறான ஆட்சேபனைகளை எழுப்பியது தெரியவந்தால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950, பிரிவு 31ன் கீழ் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை பாயும் எனவும் தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.

Advertisement