சாத்துாரில் மெயின் ரோட்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு

சாத்துார்: சாத்துார் மெயின் ரோட்டில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் அவஸ்தையடைந்து வருகின்றனர்.

சாத்துாரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு 10ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆவின் கடை, மாற்றுத்திறனாளிகள் கடை, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான கடை என பலர் நெடுஞ்சாலைத்துறை மூலமும் நகராட்சி, ஆவின் மூலமும் பெட்டிக்கடைகள் அமைத்துள்ளனர்.

இந்த கடைகளில் அனுமதி பெற்ற பொருள்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. இதற்கு மாறாக ஜவுளிக்கடைகள், டீ கடைகள், இளநீர், பழக்கடைகள் தான் செயல்பட்டு வருகிறது.

பழைய அரசு மருத்துவமனை கட்டடம் முன்பும், பஸ் ஸ்டாண்ட் அருகிலும், நந்தவனப்பட்டி தெருக்கள் பகுதியிலும் ஆக்கிரமிப்பு கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரோடு அகலம் குறைந்து காணப்படுகிறது. ஆக்கிரமிப்பு கடைக்காரர்களால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை யினர் அனுமதி இன்றி ஆக்கிரமித்து வைக்கப் பட்டுள்ள கடைகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement