கடலோரத்தில் மழை; உள் மாவட்டங்கள் வறட்சி: எல் நினோவால் முரண்பட்ட வானிலை கணிப்பு

கோவை: 'எல்நினோ' வால் கடலோர மாவட்டங்களில் புயலால் தொடர் மழையும், உள் மாவட்டங்களில் தொடர் வறண்ட நிலையும் இருக்க வாய்ப்புள்ளது என, வேளாண் பல்கலை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

மாவட்ட அளவிலான, 2026 -ம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை அக்., முதல் டிச., வரை எவ்வாறு இருக்கும் என, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. தமிழகத்தில், இந்தாண்டில், 468 மி.மீ., வடகிழக்கு பருவமழை பெய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இம்மழையளவு அதன் நீண்ட கால சராசரியான 464 மி.மீ., மழையை ஒத்துள்ளது.

ஜூன் 1 முதல் செப்., 22 வரை கிடைக்கும் மழையளவு 254 மி.மீ., இது நீண்டகால சராசரியை(292 மி.மீ.,) விட, 13 சதவிகிதம் குறைவு. எதிர்பார்க்கப்படும் நீண்டகால சராசரியை ஒத்த வடகிழக்கு பருவமழையால் இப்பற்றாக்குறை ஓரளவு சரி செய்யப்படும். நீர் நிலைகளில் நீர் இருப்பு மேம்பட்டு, நிலத்தடி நீர் உயர வாய்ப்புள்ளது.

இப்போதுள்ள 'எல்நினோ' நிகழ்வால் பருவமழை பரவலில் வேறுபாடு நிகழ வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் புயலால் தொடர் மழையும், உள் மாவட்டங்களில் தொடர் வறண்ட நிலையும் இருக்க வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் ஆண்டு மொத்த மழை பொழிவில், 50 சதவீதம் என்பதால் விவசாயம், நீர் மேலாண்மையில் இந்த பருவமழை முக்கிய பங்கு வகிக்கும். விவசாயிகள் அதிக மழை கிடைக்கப் பெறும் பொழுது அதிகப்படியான மழை நீரை பண்ணை குட்டைகளில் சேமித்து வறட்சி காலத்தில் நீர்ப்பாசனத்துக்கு பயன்படுத்தலாம். தமிழகத்தின் வடகிழக்கு பருவமழையின் சராசரி மழையளவு 434 மி.மீட்டர் முதல் 438 மி.மீட்டர் வரை இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.

வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி கூறுகையில், '' அடுத்த மூன்று மாதங்களுக்காான மழையளவு தான் கொடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை அக்., இரண்டாம் வாரம் துவங்கும். கோவையை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை குற்றாலம், சிறுவாணி அணைப்பகுதியில் மழை பெய்கிறது. அக்., மூன்று வாரத்தில் வடகிழக்கு பருவமழை முழுமையாக பெய்ய வாய்ப்புள்ளது,'' என்றார்.

Advertisement