காசநோயால் பாதித்த பெண்ணை காப்பாற்றிய காவேரி மருத்துவமனை
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காவேரி மருத்துவமனையில், காசநோய் பாதிப்பால் நுரையீரலில் ஏற்பட்ட கடுமையான சேதம் காரணமாக, உயிருக்கு ஆபத்தான நிலையில், 28 வயது மதிக்கத்தக்க பெண் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே, இப்பெண்ணிற்கு கடந்த சில ஆண்டுகளாக லேசான இருமலுடன் ரத்தம் வெளிவந்து கொண்டிருந்ததையும், மெல்லிய ரத்த நாளங்கள் வெடித்து, நுரையீரலுக்குள் அதிகளவில் ரத்தப்போக்கு, ரத்த உறைவு ஏற்பட்டதையும், காவேரி மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி மருத்துவ குழுவினர் கண்டறிந்தனர்.
அப்பெண்ணிற்கு ஆஞ்சியோகிராபி பரிசோதனை செய்த போது, இரு நுரையீரல்களுக்கும் ரத்தம் கொண்டு செல்லும் முக்கிய தமனிகள், ஒரே இடத்தில் இருந்து துவங்கும் அரிய வகை உடலமைப்பு இருப்பது தெரிந்தது. மேலும், அருகிலுள்ள மூன்று இண்டர்கோஸ்டல் தமனிகளும் விரிவடைந்து, ரத்தப்போக்கை மேலும் தீவிரப்படுத்தியிருந்தன. அதனால், ஆபத்தான அறுவை சிகிச்சையை தவிர்க்க, பிரோன்கியல் ஆர்ட்டரி எம்போலைசேஷன் என்ற அதிநவீன நுண்துளை சிகிச்சையை மருத்துவர்கள் தேர்வு செய்தனர்.எக்ஸ்ரே, நுண் குழாய்கள் மூலம் ரத்தப்போக்கு ஏற்பட்ட இடத்தை கண்டறிந்து, ரத்தம் கசிந்த நாளங்களை மருத்துவர்கள் துல்லியமாக அடைத்தனர்.
சிகிச்சையின் போது, எதிர்பாராத விதமாக ஒரு சிறிய தமனியில் லேசான கிழிசல் ஏற்பட்ட போதிலும், அது உடனடியாக தானாகவே உறைந்து ரத்த ஓட்டம் தடைபட்டது. இதனால், எந்த சிக்கலுமின்றி பாதிக்கப்பட்ட ரத்த நாளங்களும் அடைக்கப்பட்டு, அப்பெண் காப்பாற்றப்பட்டார்.