விலங்குகளை வேட்டையாட துப்பாக்கி பதுக்கியவர் கைது

அரூர்: தர்மபுரி வனக்கோட்டம், மொரப்பூர் வனச்சரக அலுவலர் முகுந்தனுக்கு கிடைத்த தகவலின்படி, வனவர்கள் பவித்ரா, விவேகானந்தன், வனக்காப்பாளர்கள் சதிஷ்குமார், அர்ச்சனா, ராஜேஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினர், கடந்த, 7ம் தேதி மாலை மொரப்பூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட வாதாப்பட்டி பிரிவு, அரூர் வனக்காவல் சுற்றுக்கு உட்பட்ட எட்டிப்பட்டியில் வெங்கடேசன், 39, என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அங்கு, 2 நாட்டு துப்பாக்கி, கரிமருந்து டப்பா, ஈய குண்டுகள், பால்ரஸ் குண்டுகள், 2 வெட்டு கத்திகள், கறி வெட்டும் கட்டை, கடப்பாரை, கன்னி வலை உள்ளிட்டவை இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், வெங்கடேசனிடம் விசாரித்ததில், வனப்பகுதிக்கு சென்று துப்பாக்கியால் விலங்குகளை வேட்டையாடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை கைது செய்த வனத்துறையினர், தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் முன் ஆஜர்படுத்தினர். அவர் வெங்கடேசனுக்கு, 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement