புதிய மொழி கற்போம்!

இன்றைய நவீன உலகில் தாய்மொழியுடன் சேர்த்து இன்னொரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது.

புதிய மொழியைப் பயில்வது நமது மூளைக்குச் சிறந்த பயிற்சியாக அமைகிறது. இலக்கண விதிகள், புதிய சொற்கள் மற்றும் வாக்கிய அமைப்புகளைக் கற்றுக்கொள்ளும் போது நினைவாற்றல் பெருகுகிறது. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் திறன் மற்றும் சிக்கலான கணக்குகளுக்குத் தீர்வு காணும் நுண்ணறிவு ஆகியவை புதிய மொழி கற்கும் மாணவர்களுக்கு இயல்பாகவே கூடுகிறது.

பள்ளியில் ஒரு புதிய மொழியைக் கற்கும் மாணவர்களின் ஒட்டுமொத்தக் கல்வித் திறன் சிறந்து விளங்குகிறது. சொற்களஞ்சியம் பெருகுவதால், பிற பாடங்களையும் எளிதாகப் புரிந்துகொண்டு படிக்கும் ஆற்றல் கிடைக்கிறது. தேர்வு நேரங்களில் ஏற்படும் கவனச்சிதறல்கள் குறைந்து, பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் மன உறுதி மாணவர்களுக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது.

ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளும் போது அந்த மொழியைப் பேசும் மக்களின் கலாசாரம், பண்பாடு மற்றும் வாழ்க்கை முறையையும் சேர்த்தே நாம் அறிகிறோம். இது குறுகிய வட்டத்தைத் தாண்டி, உலகளாவிய பார்வையை மாணவர்களின் மனதில் இது ஆழமாக விதைக்கிறது.

எதிர்காலத்தில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு பல மொழிப் புலமை பெரும் உதவி புரிகிறது. உலகளாவிய நிறுவனங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைத் சரளமாகப் பேசும் திறமையுள்ளவர்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றன. இதனால் தகவல் தொடர்புத் திறன் உயர்வதோடு, தலைமைப் பண்புகளும் எளிதில் கைகூடுகின்றன.

இது மாணவர்களின் கூச்ச சுபாவத்தைப் போக்கி, எந்தச் சூழலிலும் எவருடனும் தைரியமாக உரையாடும் தன்னம்பிக்கையைத் தருகிறது. பள்ளிப் பருவத்திலேயே இன்னொரு மொழியைக் கற்கத் தொடங்குவது மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு பெரும் உதவி புரிகிறது.

Advertisement