அதிகார அமைப்பின் மீது ராகுலுக்கு மரியாதை இல்லை; வெட்கக்கேடான விஷயம் என மத்திய அமைச்சர் காட்டம்

2

புதுடில்லி: அரசியலமைப்பு ரீதியான அதிகார அமைப்பின் மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு மரியாதை இல்லை என்பது வெட்கக்கேடான விஷயம் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.

டில்லியில் அவர் கூறியதாவது: எந்தவொரு அரசியலமைப்பு ரீதியான அதிகார அமைப்பின் மீதும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு மரியாதை இல்லை என்பது வெட்கக்கேடான விஷயம். இந்தியக் குடிமகனாகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் தனக்குள்ள சட்டரீதியான அல்லது அரசியலமைப்பு ரீதியான கடமைகள் குறித்த எந்தப் புரிதலும் அவரிடம் இல்லை.

ராகுல் ஆணவம், மரியாதையற்ற நடத்தை மற்றும் கண்ணியமின்மையை வெளிப்படுத்தியுள்ளார்; அத்துடன் சட்டம் மற்றும் பொது அறிவு குறித்த அறியாமையையும் வெளிப்படுத்தியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். ஜனாதிபதியுடன் சந்திக்க நேரம் கோரப்படும்போது, ​​அவர் உடனடியாகவும் கனிவுடனும் அதை வழங்குகிறார்.

ராகுல் தனது குற்றச்சாட்டுகளில் ஏதேனும் உண்மைத்தன்மை இருந்திருந்தால், அவர் முன்வைத்த கோரிக்கைக்குத் தேவையான ஆதாரங்களுடன் செல்வது அவரது கடமையாகவும், கண்ணியமான செயலாகவும் இருந்திருக்கும். அவர் ஒரு கோரிக்கை மனுவை அளித்தபோது, ​​அதில் அவரது போலியான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் தரவுகளோ, உண்மைகளோ, ஆதாரங்களோ இணைக்கப்படவில்லை என்பது வெளிப்படை. அவரது பொய்களை ஆதரிக்க எதுவும் இல்லாததால், தேவையான ஆதாரங்களை வழங்குமாறு ஜனாதிபதி அவரிடம் கேட்டுக்கொண்டார்.

சந்திப்பிற்கு பிறகு ராகுல், ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதாக எந்த அடிப்படையில் கூறுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. தான் சொல்வதெல்லாம் வேதவாக்காகக் கருதப்பட வேண்டும் என்பது போல, ஆதாரம் கேட்டதற்காக அவர் ஜனாதிபதியை மிகவும் இழிவான வார்த்தைகளால் விமர்சித்தார். ராகுலின் செயலை நான் கண்டிக்கிறேன்.

அவருடன் சென்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தவறான நடத்தை, ஆணவம் மற்றும் நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகார அமைப்பின் மீதான மரியாதையற்ற நடத்தையையும் நான் கண்டிக்கிறேன். ராகுல் உடனடியாக ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாகத் திகழும் ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

நாட்டின் எதிர்காலத்திற்காகக் கடமையுணர்வுடன் செயல்படும் அரசியலமைப்பு அதிகார அமைப்புகளை இழிவுபடுத்தியதற்காகவும் 140 கோடி இந்தியர்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு களங்கம் என்று நான் கருதுகிறேன்.

இந்திய அரசியலமைப்பை அவர் முற்றிலும் புறக்கணித்துவிட்டார். அரசியலமைப்பை கையில் ஏந்திச் செல்வதால் மட்டும் அதற்கு மரியாதை செலுத்திவிட முடியாது. அரசியலமைப்பு மீதான உங்கள் மரியாதையை உங்கள் நடத்தையும் செயல்பாடுகளுமே வெளிப்படுத்து

கின்றன. இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.

Advertisement