ரென்ஷா சதம்: மீண்டது ஆஸ்திரேலியா

டர்பன்: டர்பன் டெஸ்டில் மாட் ரென்ஷா, 190 ரன் விளாச, ஆஸ்திரேலிய அணி சரிவில் இருந்து மீண்டது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நேற்று டர்பனில் நடக்கிறது. போதிய வெளிச்சமின்மையால் முடிவுக்கு வந்த முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 187/6 ரன் எடுத்திருந்தது. ரென்ஷா (46), கம்மின்ஸ் (33) அவுட்டாகாமல் இருந்தனர்.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. கம்மின்ஸ் 43 ரன்னில் முல்டர் வேகத்தில் வெளியேறினார். மிட்சல் ஸ்டார்க் (6) நிலைக்கவில்லை. ஆஸ்திரேலியா 230/8 என இருந்தது. அடுத்து மாட் ரென்ஷாவுடன் ஜோடி சேர்ந்தார் நாதன் லியான். இவர் சூப்பராக 'கம்பெனி' கொடுக்க, மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரென்ஷா.
ரென்ஷா அபாரம்
நோர்க்கியா பந்தில் பவுண்டரி அடித்த ரென்ஷா, டெஸ்ட் அரங்கில் 2வது சதம் எட்டினார். ஆஸ்திரேலிய அணி சரிவில் இருந்து மீண்டது. தொடர்ந்து நோர்க்கியா 146, 147 கி.மீ., வேகத்தில் பந்து வீசிய போதும், துணிச்சலாக எதிர்கொண்ட ரென்ஷா, 150 ரன்களை கடந்தார். 9 வது விக்கெட்டுக்கு 134 ரன் சேர்த்த போது, யான்சென் பந்தில் லியான் (27 ரன், 92 பந்து) அவுட்டானார்.
அடுத்த சிறிது நேரத்தில் ரென்ஷா, ஹார்மர் சுழலில் சிக்கி, 190 ரன்னில் அவுட்டானார். ஒரு கட்டத்தில் 124/6 என இருந்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 390 ரன்னில் ஆல் அவுட்டானது. தென் ஆப்ரிக்கா சார்பில் முல்டர் 4, யான்சென் 3, நோர்க்கியா 2 விக்கெட் சாய்த்தனர்.
பின் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு ரிக்கிள்டன் 'டக்' அவுட்டாகி 'ஷாக்' கொடுத்தார். முதல் இன்னிங்சில் 27/1 ரன் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மையால் போட்டி நிறுத்தப்பட்டது. மார்க்ரம் (15), பெடிங்ஹாம் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

இது அதிகம்
டெஸ்ட் அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார் ரென்ஷா (190 ரன்). முன்னதாக 2017ல் 184 ரன் (எதிர்-பாக்.,) எடுத்திருந்தார்.
* டெஸ்ட் அரங்கில் கடந்த 2017ல் (சிட்னி, எதிர்-பாக்.,) ரென்ஷா, முதல் சதம் அடித்தார். தற்போது சுமார் 10 ஆண்டுக்குப் (9 ஆண்டு, 280 நாள்) பின் மீண்டும் நேற்று சதம் எட்டினார்.
* தென் ஆப்ரிக்க மண்ணில் நடந்த டெஸ்டில், ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த ஆஸ்திரேலிய வீரர்களில் கிரெக் பிளிவெட் (214, 1997), கில்கிறிஸ்ட் (204, 2002), கோலின்சிற்கு (203, 1921) அடுத்து 4வது இடம் பெற்றார் ரென்ஷா (190).

Advertisement