எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர் சங்க தலைவருக்கு எதிராக போர்க்கொடி

நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள எல்.பி.ஜி., டேங்கர் உரிமையாளர்கள் சங்க தலைவருக்கு எதிராக, 150க்கும் மேற்பட்ட டேங்கர் லாரி உரிமையாளர்கள், சங்க அலுவலகம் முன் திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென் மண்டல எல்.பி.ஜி., காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், நாமக்கல்லில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில், 4,500 காஸ் டேங்கர் லாரிகள் உள்ளன. இவை அனைத்தும், ஐ.ஓ.சி., – பி.பி.சி., – எச்.பி.சி., ஆகிய, மூன்று ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சமையல் காஸ் சிலிண்டர்களில் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சங்கத்தின் தலைவராக சுந்தர்ராஜன் உள்ளார்.

‘இவர், சங்க உறுப்பினர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என, உறுப்பினர்கள் வலியுறுத்தியும், இதுவரை கூட்டத்தை கூட்டவில்லை’ என, குற்றம்சாட்டி, சங்க பொருளாளர் அம்மையப்பன், துணை செயலாளர் கவுசிக், இணை செயலாளர் கோபி ஆகியோர் தலைமையில், 150க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள், நேற்று இரவு, 7:30 மணிக்கு ஒன்று கூடி, நாமக்கல் – சேலம் சாலையில் உள்ள சங்க அலுவலகம் முன் அவசர ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து, சங்க பொருளாளர் அம்மையப்பன், துணை செயலாளர் கவுசிக், இணை செயலாளர் கோபி ஆகியோர் கூறியதாவது:

சங்க தலைவர் உட்பட அனைத்து நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்துவிட்டது. ஆனால், இதுவரை செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை தலைவர் சுந்தர்ராஜன் நடத்தவில்லை. கூட்டத்தை நடத்தி உறுப்பினர்களின் நலன், சங்க செயல்பாடுகள், புதிய நிர்வாகிகளை தேர்தெடுக்க தேர்தல் நடத்துவது குறித்தும் பேசவில்லை. இதுகுறித்து கேட்டால், எந்தவித பதிலும் அளிப்பதில்லை. அதனால், நாங்கள் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினோம். வீடுகளுக்கு காஸ் பைப் லைன் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம் தான் என்றாலும், எங்களின் தொழில் மேலும் முடங்க வாய்ப்புள்ளது. தவிர சங்க உறுப்பினர்களின் நலனுக்காக, சங்கத்தின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை தலைவர் கூட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, எல்.பி.ஜி., சங்க தலைவர் சுந்தரராஜனிடம் கேட்டபோது, ‘‘சங்க பொருளாளர், ஐந்து, ஆறு மாதமாக கணக்கே காட்டவில்லை. அவர் கணக்கு கொடுத்தால் தானே செயற்குழு கூட்ட முடியும்,’’ என்றார்.

Advertisement