பரவையில் நாள் முழுவதும் மின்தடை குடியிருப்புவாசிகள் ரோடு மறியல்

மதுரை: மதுரை பரவையில் நேற்று முன்தினம் மாலை முதல் 24 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீடித்ததால் குடியிருப்பு வாசிகள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

பரவை பவர்ஹவுஸ் மீனாட்சி நகரில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு பழைய டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் சப்ளை செய்யப்பட்டதால் ‘லோடு’ தாங்காமல் 3 மாதங்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. மின் ஊழியர்கள் ஸ்பேர்களை மட்டும் மாற்றிச் சென்றதால் பிரச்னை தொடர்ந்தது.

நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு மீண்டும் மின்தடை ஏற்பட்டது. இரவு 8:00 மணியளவில் ஊழியர்கள் சரிசெய்து கொண்டிருந்த போதே மின்னழுத்தம் அதிகமாகி பல வீடுகளில் மின்சாதனங்கள் பழுதாகின. இரவு முழுவதும் மின்சாரம் இன்றி குழந்தைகள், முதியோர் அவதிக்குள்ளாகினர்.

நேற்று காலை 8:30 மணியளவில் ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரை மாற்றும் பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே இருந்த டிரான்ஸ்பார்மரை விட பவர் குறைந்த டிரான்ஸ்பார்மர் மாற்றப்பட்டதால் சரிபார்ப்பு பணியின் போதே பழுதானது. வேறு ஸ்பேர்கள் இல்லாததால் நேற்று இரவும் மின் தடை நீடித்தது.

இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்புவாசிகள், நேற்று இரவு 7:00 மணியளவில் மதுரை – திண்டுக்கல் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். சமயநல்லுார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குடியிருப்புவாசிகள் கூறுகையில், ‘‘முதல்வர் பிரிவுக்கு புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. மின்தடையால் அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் இல்லை.

இன்வெர்டரிலும் ‘பேக் அப்’ தீர்ந்து விட்டது. பழுதடைந்த மின்சாதனங்களுக்கு இழப்பீடு தருவது யார்,’’ என்றனர்.

Advertisement