‘தண்டனைகளால் மக்களை மாற்ற முடியாது’: நீதிபதி புகழேந்தி பேச்சு

மதுரை: தண்டனைகளால் மக்களை மாற்ற முடியாததை அன்பால் மட்டுமே மாற்ற முடியும் என்பதற்கு பிரம்மா குமாரிகள் அமைப்பு உதாரணமாக திகழ்கிறது, என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பி.புகழேந்தி பேசினார்

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் 90வது ஆண்டை முன்னிட்டு நவ தசாப்த விழா நடந்தது. ராஜஸ்தான் பிரம்மா குமாரிகள் கல்விப்பிரிவு இணைத்தலைவர் ஷீலு முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீதிபதி பி.புகழேந்தி பேசியதாவது: நாட்டில் நடக்கும் அநியாயங்களை பார்க்கும் போது எனக்குள் கோபம் வரும். ஆரோக்கியம் இல்லாத மனிதனிடம் அன்பு இருக்காது. ஆரோக்கியத்திற்கான அடிப்படை நல்ல ஒழுக்கங்கள் மட்டுமே. இன்றைய சமுதாயம் எது மகிழ்ச்சி என்று தெரியாமல், போதையை நோக்கி செல்கிறது. நாட்டில் நடக்கும் 50 சதவீத குற்றங்களுக்கு போதை மட்டுமே காரணம். நாம் அனைவரும் உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். பல சமயங்களில் நம் உறவுகளோடு கோபம் கொள்கிறோம். ராஜயோகம் என்ற பயிற்சியின் மூலம் உலக அமைதியை அடைவோம் என்ற உயரிய சிந்தனையை பிரம்மா குமாரிகள் அமைப்பு நோக்கமாக கொண்டுள்ளது.

அவர்கள் கூறும் ஓம் சாந்தி என்ற வார்த்தையே நமக்கு அமைதியைக் கொடுக்கிறது. மூன்று முறை ஓம் சாந்தி என்று சொல்லும் போது, எனக்குள் வலிமையான அமைதியை நான் உணர்ந்தேன். பிரம்ம குமாரிகள் எப்போதும் சாத்வீகமாக கருணை ததும்பி பேசுகிறார்கள். கோபத்தை அன்பால் சரி செய்து விடுவோம் என்கிறார்கள். தண்டனைகளால் மக்களை மாற்ற முடியாததை அன்பால் மட்டுமே மாற்ற முடியும் என்பதற்கு பிரம்மா குமாரிகள் அமைப்பு உதாரணமாக திகழ்கிறது என்றார்.

பிரம்மா குமாரிகள் கல்விப்பிரிவு இணைத்தலைவர் ஷீலு பேசுகையில், பிரிவினையால் உலகம் பாதிப்படைகிறது. நம் பாரத நாட்டில் பொற்கால ஆட்சி மீண்டும் நடக்க மக்கள் ஒற்றுமையாக இருப்பது அவசியம். மதங்களை தாண்டிய ஆன்மிகம் மட்டுமே மனிதர்கள் ஒற்றுமையாக இருப்பதை கற்றுத்தரும் என்றார்.

இந்திய மருத்துவ சங்க மாவட்ட தலைவர் டாக்டர் ராஜீவ் அய்யப்பன், ஆயுதப்படை துணை கமிஷனர் பிரபாகர், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், பிரம்மா குமாரிகள் துணை மண்டல இயக்குநர் உமா, ஒருங்கிணைப்பாளர் பாண்டியமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement