மாநில பவர்லிப்டிங் போட்டி: புதுச்சேரி வீரருக்கு தங்கம்

புதுச்சேரி: கோவையில் நடந்த 7வது மாநில அளவிலான கிளாசிக் வலு துாக்கும் போட்டியில், புதுச்சேரி வீரர் குறள்வேந்தன் தங்கப்பதக்கம் வென்றார்.

தமிழ்நாடு வலுதுாக்கும் சங்கம், கோவை மாவட்ட வலுதுாக்கும் சங்கம் மற்றும் கே.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி ஆகியன இணைந்து கோவையில் மாநில அளவிலான பவர்லிப்டிங் (வலுதுாக்கும்) சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தின.

இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் சிறப்புப் பிரிவில் 66 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற புதுச்சேரி வீரர் குறள்வேந்தன், தனது அபாரமான முயற்சியால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அவர் மூன்று பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 245 கிலோ எடையை துாக்கி முதலிடம் பிடித்தார். ஸ்குவாட் முறையில் 80 கிலோ எடையும், டெட்லிப்ட் முறையில் 85 கிலோ எடையும், பெஞ்ச் பிரஸ் முறையில் 40 கிலோ எடையும் என, மொத்தம் 245 கிலோ எடை துாக்கி அசத்தினார்.

உடல்ரீதியான சவால்களைத் தாண்டி, தனது கடின உழைப்பாலும் அசைக்க முடியாத தன்னம்பிக்கையாலும் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற புதுச்சேரி வலுக்கும் வீரர் குறள்வேந்தனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இவர் புதுச்சேரி முன்னாள் கலெக்டர் வல்லவன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement