கிழக்கு கோபாலபுரம் சாலையில் குடிநீர் வாரிய பணியால் அவதி
ஆவடி: கிழக்கு கோபாலபுரம் பிரதான சாலையில், ஆவடி மாநகராட்சி சார்பில் நடக்கும் மெட்ரோ குடிநீர் வாரிய பணியால் சாலை சுருங்கி, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆவடி மாநகராட்சி, பட்டாபிராம் 37வது வார்டில், கிழக்கு கோபாலபுரம் முதல் பிரதான சாலை, 38 அடி அகலம் உடையது. இந்த சாலையின் வலது புறத்தில், மழைநீர் வடிகால் உள்ளது. தவிர, ஆக்கிரமிப்புகளால் சாலை சுருங்கியுள்ளது.
இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன், ஆவடி மாநகராட்சி சார்பில், மெட்ரோ குடிநீர் பணிக்காக சாலை தோண்டப்பட்டது. அப்பணி முடிந்த பின், அந்த பள்ளங்களில் மண் கொட்டி முறையாக மூடாததால், சாலை மட்டத்தைவிட உயரமாக இருக்கிறது.
இதனால், சாலை சுருங்கி தினமும் ‘பீக் ஹவர்ஸ்’ நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி பேருந்துகள், லாரிகள் சென்றால், வேறு எந்த வாகனமும் செல்ல முடியாத சூழல் உருவாகி உள்ளது.
கிழக்கு கோபாலபுரம் பிரதான சாலையில் வாகனங்கள் சீராக செல்வதற்கான நடவடிக்கையை, ஆவடி மாநகராட்சி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.