களக்காட்டூரில் பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்: சீரமைக்க மக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே களக்காட்டூர் ஊராட்சியில், பழுதடைந்துள்ள தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே களக்காட்டூர் ஊராட்சியில், மாநில நிதிக்குழு மானியம் 7.96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு மையம் 2019ல் அமைக்கப்பட்டது.

இங்குள்ள இயந்திரத்தின் சிறு துளையில் ஐந்து ரூபாய் நாணயம் செலுத்தினால், குழாய் வழியாக 20 லி., சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறலாம். இதன் மூலம் அப்பகுதி மக்கள் பயனடைந்து வந்தனர்.

மூன்று மாதங்களுக்கு முன், தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்தது. இதனால், அப்பகுதி மக்கள், அதிக விலை கொடுத்து, கேன் தண்ணீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே, பழுதடைந்துள்ள தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சரிசெய்ய, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

களக்காட்டூர் ஊராட்சி செயலர் சேகர் கூறுகையில், ‘‘தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் உதிரிபாகங்கள் கிடைக்க தாமதம் ஆவதால், உடனே சரிசெய்ய முடியவில்லை. உதிரிபாகங்கள் கிடைத்ததும் சரிசெய்யப்படும்,’’ என்றார்.

Advertisement