திருப்பூரின் உள்நாட்டுச் சந்தையான காதர்பேட்டை காத்திருக்கிறது!

திருப்பூர்: நவ. 8 தீபாவளி. திருப்பூரின் உள்நாட்டுச் சந்தையான காதர்பேட்டை வழக்கமாக இந்நேரம் களைகட்டியிருக்கும். ஆனால் இந்த ஆண்டு வர்த்தகம் தாமதமாகவே சூடுபிடிக்கிறது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான உள்ளாடைகள், டி--ஷர்ட், பனியன், லெக்கின்ஸ், பெர்முடாஸ் என அனைத்து வகை பின்னலாடைகளும் இங்கு தான் தயாராகி நாடு முழுவதும் செல்கின்றன. பண்டிகைக்கான உற்பத்தி பல மாதம் முன்பே தொடங்கி விட்டாலும், வெளிமாநில மொத்த வியாபாரிகளின் கொள்முதல் தான் சந்தையை தீர்மானிக்கும்.

தீபாவளி நெருங்கி வரும் நிலையில், கடந்த 5ம் தேதி முதல் தான் விசாரணை தொடங்கியுள்ளது. காரணம் - விலை குழப்பம். நுால் விலை, சாயக் கட்டணம், எலாஸ்டிக், எம்ப்ராய்டரி என உற்பத்திச் செலவு கணிசமாக உயர்ந்துள்ளது. 5 முதல் 10 சதவீதம் வரை விலையை உயர்த்த நினைத்தால், வெளிமாநில வியாபாரிகள் பழைய விலைக்கே கேட்கிறார்கள்.

விலையை உயர்த்தினால் வாடிக்கை நழுவும்; பழைய விலைக்கு விற்றால் லாபம் கரையும் என்ற இக்கட்டில் உற்பத்தியாளர்கள் உள்ளனர். ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கும் இதே நெருக்கடி தான்.

காதர்பேட்டை செகண்ட்ஸ் பின்னலாடை வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் நாகராஜ் கூறியதாவது:

திடீரென விலையை உயர்த்தினால் வெளிமாநில வியாபாரிகள் ஏற்க மாட்டார்கள். தீபாவளி வரை பழைய கட்டணத்துக்கே ஜாப் ஒர்க் தரச் சொல்கிறார்கள். இன்னும் 2 வாரத்துக்கு பழைய விலைக்கே கொடுத்தால் சமாளித்து விடலாம். ஆயுத பூஜைக்கு பிறகு 24ம் தேதி முதல் அனைத்து கடைகளிலும் விற்பனை களைகட்டும் என நம்புகிறோம். கடைசி நேரம் கைகொடுக்கும்.

இவ்வாறு, நாகராஜ் கூறினார்.

காதர்பேட்டையின் வழக்கமே கடைசி நேரம் தான். அந்த நம்பிக்கையில் தான் இப்போதும் காத்திருக்கிறது சந்தை.

Advertisement