ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் அருள்பாலிப்பு: வடபழனி முருகன் கோவிலில் சக்தி கொலு தொடக்கம்

சென்னை: நவராத்திரி விழாவை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், கோவில் துணை கமிஷனர் சித்ராதேவி, குத்து விளக்கேற்றி, சக்தி கொலுவை நேற்று மாலை தொடங்கி வைத்தார். கோவில் தக்கார் இல.ஆதிமூலம் உட்பட பலர் பங்கேற்றனர்.

முதல் நாளில், கோவிலில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டது. இன்று, மீனாட்சி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

நாளை முதல் வரும் 19ம் தேதி வரை, அன்னபூரணி, அபிராமி, கெஜலட்சுமி, கருமாரி, கம்பாநதி, சரஸ்வதி அம்மன், பரிவேட்டை அலங்காரம் எழுந்தருள்கிறார். நவராத்திரி நடைபெறும் 10 நாட்களில் தினமும் காலை 11:00 மணி; மாலை 6:00 மணிக்கு, அம்மன் கொலு மண்டபத்தில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தப்படும்.

மாலை 5:00 மணி முதல் 7:30 மணி வரை லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், மகளிர் குழுவினரின் கொலு பாட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

கொலு பார்வை நேரம்





வடபழனி முருகன் கோவில் கொலுவை, காலை 6:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடலாம்.

Advertisement