வயதை வென்ற கால்கள் வியக்க வைத்த வேகம்

அவிநாசி: அவிநாசி அருகே 17-வது ஆண்டு திருப்பூர் மாவட்ட அளவிலான மூத்தோர் தடகளப் போட்டிகள் நடைபெற்றன.

ஸ்ரீநாச்சம்மாள் வித்யவாணி பள்ளியில், திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் மற்றும் திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டன.

ஆண்களுக்கான போட்டிகளை திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளர் ஜெயசித்ரா சண்முகம், பெண்களுக்கான போட்டிகளை உடுமலை சிஸ்டம் குழும நிர்வாக இயக்குநர் தங்கவேலுவும் தொடங்கி வைத்தனர். இப்போட்டிகளில் 775 ஆண்கள், 464 பெண்கள் என மொத்தம் 1,239 பேர் பங்கேற்றனர். 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75 மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டோர் என 11 பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் 5 கி.மீ. நடைப்போட்டி, 100, 200, 400, 800, 1,500, 5,000 மீட்டர் ஓட்டங்கள், தடை தாண்டும் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், கோலுான்றித் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள், டிச. 18 முதல் 20-ம் தேதி வரை கோவை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்க உள்ளனர்.

ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்கம், வடக்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் நாச்சம்மாள் வித்யவாணி ப ள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

திருப்பூர் மாவட்ட தடகள சங்கத்தைச் சேர்ந்த 30 நடுவர்கள் போட்டிகளை நடத்தி னர்.

Advertisement