அபிராமம் சுற்றியுள்ள பகுதிகளில் வழிப்பறி: போலீஸ் ரோந்தை தீவிரப்படுத்தக் கோரிக்கை

கமுதி: கமுதி அருகே அபிராமம், கண்ணாத்தான் சுற்றியுள்ள பகுதிகளில் வழிப்பறி சம்பவங்களால் மக்கள் அச்சம், போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதுகுளத்துார் அருகே மணிபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி 40. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அபிராமத்தில் இருந்து உறவினர்களுடன் டூவீலரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அபிராமம், கண்ணாத்தான் அருகே டூவீலரில் வந்த ஆறு பேர் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த செயினை திருடிச் சென்றுள்ளனர். அபிராமம் போலீசார் நான்கு பேரை கைது செய்தனர்.

அபிராமம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மக்கள் கூறியதாவது: அபிராமம், கண்ணாத்தான் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

முதுகுளத்துாரில் இருந்து மதுரை செல்லும் சிலர் அபிராமம் செல்லாமல் கண்ணாத்தான் முக்கு ரோட்டில் இருந்து பிரிந்து 5 கி.மீ., சுற்றி மதுரை செல்லும் ரோட்டில் வழியாக செல்கின்றனர்.

இப்பகுதி வரத்து கால்வாய்கள், கண்மாய் பகுதியாக இருப்பதால் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து புதர் போல் உள்ளது. இதனை சிலர் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இவ்வழியில் வரும் மக்களை அச்சுறுத்தி திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் தனியாக செல்வதற்கே மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அபிராமம் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் போலீசார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

இப்பகுதியில் 'சிசிடிவி' கேமராக்கள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Advertisement