மருத்துவக் கல்லுாரி கட்டட பராமரிப்பு நிதி: பொதுப்பணித்துறை சுணக்கம்

விருதுநகர்: புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகள், மருத்துவமனைகளின் கட்டடங்களுக்கான பராமரிப்பு நிதியை வழங்குவதில் பொதுப்பணித்துறை சுணக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள் 2022 ஜன. 12ல் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆனால் செயல்பாட்டிற்கு வந்த ஓராண்டிலேயே பல மருத்துவமனைகளில் சுவர்களில் சிமென்ட் பூச்சு கள் பெயர்ந்து விழுதல், வெள்ளை நிற சுவர்கள் நீர் கசிவால் பச்சை நிறத்தில் பாசி படர்ந்த நிலையில் மாறியுள்ளது.

மேலும் தண்ணீர் குழாய் கசிவால் நீருற்று, சுவர்களில் ஆங்காங்கே விரிசலும் ஏற்பட்டுள்ளது. கழிவறைகளில் தண்ணீர் குழாய் திறப்பான்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த பிரச்னைகளை சரிசெய்யும் பணிகள் நடைபெற்றாலும் பெயரளவிலும், கண் துடைப்பிற்கான பணிகள் மட்டுமே நடக்கிறது. இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. தற்போது திறக்கப்பட்டு 4 ஆண்டுகளை கடந்து விட்டதால் கட்டடங்களை பராமரிக்க தேவையான நிதி கேட்டு மருத்துவமனை நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்தாலும் பொதுப்பணித்துறை நிதியை தருவதில் சுணக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே புதிய அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளின் கட்டடங்களின் பராமரிப்பு பணிகளுக்கான நிதியை பொதுப்பணித்துறை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement