அருப்புக்கோட்டையில் தானிய கிடங்குகள் வீண்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ரூ. பல லட்சம் செலவில் கட்டப்பட்ட தானிய கிடங்குகள் பயன்படுத்தப்படாமல் சேதமடைந்து விட்டன.
அருப்புக்கோட்டை புளியம்பட்டி பகுதியில் விவசாயம் அதிக அளவில் செய்யப்படுகிறது விவசாயிகள் நலன் கருதி, அருப்புக்கோட்டை - விருதுநகர் ரோட்டில் தானிய கிடங்குகள் கட்டப்பட்டன.
இக்கட்டடம் பல லட்சம் ரூபாயில் கட்டப்பட்டு இன்று வரை பயன்படுத்தாத நிலையிலேயே சேதம் அடைந்தது. அதன் அருகிலேயே மற்றொரு கட்டடம் கட்டப்பட்டது. ஊரின் எல்லைக்கு அருகில் இருப்பதால் விவசாயிகள் யாரும் இதை பயன்படுத்த முன்வரவில்லை. கட்டடத்தை மட்டும் கட்டிவிட்டு தேவையான வசதிகள் செய்வதில் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் மெத்தனம் காட்டியதால் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இங்கு கொண்டு வருவதில் தயக்கம் காட்டினர்.
மேலும் கட்டடத்தின் கூரை தகர கூரையாக வேய்ந்துள்ளதால் பலத்த காற்றுக்கு கூரை பெயர்ந்து விட்டது. தொடர்ந்து பராமரிப்பு உள்ளிட்டு எந்த நடவடிக்கை எடுக்காததால், 2 கட்டடங்களும் பல லட்ச ரூபாய் செலவழித்து கட்டப்பட்டும் பயன்படுத்தப்படாமல் வீணாகி விட்டன.