அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் துக்காராமுக்கு கூடுதல் பொறுப்பு; அரசு அமைத்த குழுவில் செயலாளராக நியமனம்

1

மும்பை: மூத்த ஐஏஎஸ் அதிகாரியான துக்காராம் முண்டே மஹாராஷ்டிர அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை மாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

தேர்வுகளில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராகப் புனேவில் அரசு வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் தேர்வர்கள் கடந்த 10 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மஹாராஷ்டிரா அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு முறைகேடுகள் குறித்து புகாரை விசாரிக்கவும், இந்த அமைப்பை முழுமையாக மறுசீரமைக்கவும் அரசு ஒரு புதிய விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

தற்போது மஹாராஷ்டிராவின் உணவு பாதுகாப்பு துறை ஆணையராகப் பணியாற்றி வரும் நேர்மையான மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி துக்காராம் முண்டே, இந்த உயர்நிலைக் குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஐ.பி.எஸ் அதிகாரி லட்சுமி கவுதம், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கணேஷ் பாட்டீல் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி பி.டி.நாயக் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஐவர் குழுவிற்கு ஓய்வுபெற்ற நீதிபதி திலீப் போசலே தலைமை தாங்குகிறார்.

தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு புகார்களை விசாரித்து, தேர்வாணையத்தை சீரமைப்பதே இக்குழுவின் முதன்மைப் பணியாகும்.

தற்போதைய புதிய நியமனத்துடன் சேர்த்து, உணவு பாதுகாப்பு துறை ஆணையர் பதவியையும் துக்காராம் தொடர்ந்து கவனித்து வருகிறார்.

2005ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான துக்காராம் முண்டே, தனது 21 ஆண்டு காலப் பணியில் 25 முறைக்கும் மேலாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உணவு பாதுகாப்பு துறை ஆணையராகப் பொறுப்பேற்றது முதல் உணவகங்களில் அதிரடி சோதனைகள் நடத்தி கலப்படத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் செய்திகளில் பரவலாக பேசப்பட்டார். நேர்மை மற்றும் சமரசமற்ற கடுமையான நிர்வாகப் பாணி காரணமாக மக்கள் இவரை "ஐஏஎஸ் சிங்கம்" என்றும் அழைக்கின்றனர். தற்போது அரசு துக்காரம் முண்டேவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி இருக்கிறது.

Advertisement