சிதம்பரத்தில் போலீசை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்

சிதம்பரம்: சிதம்பரத்தில், போலீசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரத்தில் கடந்த வாரம் இரு பிரிவினருக்குள் ஏற்பட்ட பிரச்னையில் ஒரு தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதாக வழக்கறிஞர் திலீபன் மீது சிதம்பரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து ஸ்டேஷன் ஜாமீனில் விடுவித்தனர்.

இதனை கண்டித்தும், சிதம்பரம் டவுன் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி சிதம்பரம் பார் அசோசியேஷன் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று சிதம்பரம் டவுன் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக வழக்கறிஞர் சங்கம் அறிவிக்கப்பட்டது.

போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்த நிலையில், சிதம்பரம் வடக்கு வீதி தபால் நிலையம் முன் சிதம்பரம் பார் அசோசியேஷன் சார்பில் செயலாளர் ஞானமணி தலைமையில் சுமார் 40 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தயாநிதி, மணிவண்ணன், ஆழ்வார், பாலகுரு முன்னில வகித்தனர். செந்தில்குமார் கண்டன உரையாற்றியதும், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர்.

அவர்களை கூடுதல் எஸ்.பி., கோடீஸ்வரன், ஏ.எஸ்.பி., சத்திரிய கவின், இன்ஸ்பெக்டர்கள் தேவேந்திரன், கவிதா மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். உடன், வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதித்தது.

அதனையொட்டி, மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து, தெற்கு வீதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Advertisement