நிற்காமல் செல்லும் அரசு டவுன் பஸ்கள் சரக்கு வேனில் செல்லும் மாணவர்கள்: கலெக்டர் கவனிப்பாரா?

உளுந்துார்பேட்டை: அங்கனுார் பகுதியில் அரசு பஸ் நிற்காமல் செல்வதால் மாணவர்கள் மினி சரக்கு வேனில் ஏறி பள்ளிக்குச் செல்லும் அவலம் உள்ளது.

உளுந்துார்பேட்டை அடுத்த அங்கனுார் பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் வெள்ளையூர், உளுந்துார்பேட்டை பகுதிக்கு சென்று படிக்கின்றனர். இதனால், தினமும் காலையில் ஏராமான மாணவ, மாணவிகள் அங்கனுார் பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறிச் செல்லும் நிலை உள்ளது.

ஆனால், தினமும், காலை மற்றும் மாலை வேளைகளில் அங்கனுார் வழியாக செல்லும் தடம் எண்.4 மற்றும் தடம் எண்.7 ஆகிய அரசு டவுன் பஸ் அங்கனுார் பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவதில்லை.

இதில் தடம் எண்.4 பஸ் காட்டு எடையாரில் இருந்தும், தடம் எண்.7 ரகுநாதபுரத்தில் இருந்தும் உளுந்துார்பேட்டைக்குச் செல்கிறது.

அங்கனுார் பஸ் நிறுத்தம் வழியாகச் செல்லும் இந்த இரண்டு அரசு பஸ்கள் இருந்தும் பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவதில்லை. காரணம் வரும் வழியில் பஸ்சில் கூட்டம் நிரம்பி விடுவதால் டிரைவர்கள் நிறுத்தாமல் செல்கின்றனர்.

இதனால், அங்கனுார் பகுதி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லச் முடியாமல் திணறி வருகின்றனர். அதேபோல் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்கும் போதிய பஸ் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எப்படியாவது பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதால் மாணவ, மாணவியர் ஆபத்தை உணராமல் அந்த வழியாகச் செல்லும் மினி சரக்கு வேனில் ஏறி பள்ளிக்குச் செல்லும் அவலம் உள்ளது.

சரக்கு வேன் கிடைக்காதபோது மாணவ, மாணவிகள், அப்பகுதியில் இருந்து கூலி வேலைக்கு வெளியூர் செல்பவர்கள் 2 கி.மீ., துாரம் நடந்து சென்று தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களில் ஏறிச் செல்கின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பள்ளி மாணவர்கள் தான்.

எனவே மாணவர்களின் நிலையை உணர்ந்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகமும் அங்கனுார் பஸ் நிறுத்தத்தில் டவுன் பஸ்கள் நின்று செல்வதற்கும், கூடுதலாக பஸ் இயக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கனுார் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement