மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

மந்தாரக்குப்பம்: ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்வதை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.

கம்மாபுரம் ஒன்றிய பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள், கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் குடிநீர் ஏற்றப்பட்டு அதன் பின் தினமும் குழாய்கள் மூலம் வீடு மற்றும் கடைகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

குடிநீர் வினியோகம் செய்யப்படும் போது ‘குளோரின்’ கலந்து குடிநீர் வழங்கவும், குடிநீர் தொட்டியை துாய்மையாக பராமரிக்கவும்,15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படுகிறதா எனவும், சுத்தம் செய்த நாள், சுத்தம் செய்யப்பட வேண்டிய நாள் ஆகியவற்றை குறித்து அனைத்து ஊராட்சிகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

தற்போது பருவ நிலை காரணமாக காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கு உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஊராட்சி பகுதிகளில் குளோரின் கலந்த பாதுகாப்பான குடிநீர் வழங்கவும், மேல்நிலை நீர் தேக்க தொட்டியை முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement