வாக்காளர் படிவம் 6 தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை; சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப் பயன்படுத்தப்படும் புதிய படிவம் 6 மாற்றங்கள் குறித்து எந்தவித அனுமதியோ, உத்தரவோ பிறப்பிக்கவில்லை என சுப்ரீம் கோர்ட் தெளிவுப்படுத்தி உள்ளது.

வாக்காளர் படிவம் 6க்கு சுப்ரீம்கோர்ட் ஒப்புதல் அளித்துவிட்டது என்று தேர்தல் கமிஷன் கூறியிருந்தது. இது தொடர்பாக, வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது:

பீஹாரில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்த முறை தொடர்பான வழக்கின் தீர்ப்பு கடந்த மே 27 அன்று வழங்கப்பட்ட போது, இந்த புதிய படிவம் 6 நடைமுறையிலேயே இல்லை. இல்லாத ஒரு படிவத்திற்கு நீதிமன்றம் எவ்வாறு ஒப்புதல் அளித்து இருக்க முடியும்?

நீதிமன்றத்தின் கருத்துகளைத் தவறாகவோ அல்லது தங்களுக்குச் சாதகமாகவோ பயன்படுத்த கூடாது; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப் பயன்படுத்தப்படும் புதிய படிவம் 6 மாற்றங்கள் குறித்து எந்தவித அனுமதியோ, உத்தரவோ பிறப்பிக்கவில்லை. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணை அக்டோபர் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Advertisement