புதிய வீட்டுக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.3,000 லஞ்சம்: வரி ஆய்வாளர் கைது



கரூர்: கரூர் அருகே, புதிய வீட்டுக்கு வரி நிர்ணயம் செய்ய லஞ்சம் வாங்கியதாக, மாநகராட்சி வரி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கரூர் - திருச்சி சாலை காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த, 45 வயதுள்ள பெண் ஒருவர், புதிதாக கட்டும் வீட்டுக்கு வரி நிர்ணயம் செய்ய, காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அருகே செயல்படும், கரூர் மாநகராட்சி மண்டல அலுவலகம் 3ல், சில நாட்களுக்கு முன் விண்ணப்பித்துள்ளார்.

அதை பரீசிலனை செய்த, மாநகராட்சி மண்டலம் - 3 அலுவலக வரி ஆய்வாளர் லோகேஸ்வரன், 35, வரி நிர்ணயம் செய்ய, 3,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத அந்த பெண், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின்படி, புகார் அளித்த பெண், ரசாயனம் தடவிய, 3,000 ரூபாயை வரி ஆய்வாளர் லோகேஸ்வரனிடம் அளித்தார். மறைந்திருந்த கரூர் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ஜான் தலைமையிலான போலீசார், லோகேஸ்வரனை கையும் களவுமாக கைது செய்தனர்.

Advertisement