தொழிலதிபரிடம் இரட்டிப்பு பணம் மோசடி செய்த வழக்கில் வக்கீல் உட்பட 2 பேர் கைது: சி.பி.சி.ஐ.டி., போலீசார் அதிரடி

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொழிலதிபரிடம் பணம் மோசடி செய்த வழக்கில் வக்கீல் உட்பட இரண்டு பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர். நான்கு பேரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

லாஸ்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேைஷ தொடர்பு கொண்ட கும்பல், ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்தால், 8 சதவீத கமிஷன், மூன்று மணி நேரத்தில் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியது. இதை நம்பிய வெங்கடேஷ், நண்பர் மகேஷூடன் நகைகளை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் ரூ.2 கோடியை கடந்த மாதம் 29ம் தேதி டி.ஆர்.நகரில் வைத்து பார்த்தசாரதி, முகமது ரபீக்கிடம் கொடுத்தார். பின் குறிப்பிட்ட நேரம் கடந்தும் பணம் இரட்டிபாக திரும்ப வரவில்லை. இந்நிலையில், அந்த கும்பலில், இருந்த சிலர் பணம் இருந்த பையை பறித்துக் கொண்டு நைசாக தப்பியது. சிலரை மடக்கி பிடித்து, பணத்தை சரிபார்த்த போது, ரூ.88 லட்சம் பறித்து செல்லப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து வெங்கடேஷ் புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து 8 பேரை கைது செய்து, ரூ.39 லட்சத்தை பறிமுதல் செய்தனர். ரூ.49 லட்சத்துடன் தப்பியோடியவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்தனர்.

இதில், பணத்தை எடுத்துச் சென்ற கோபாலன்கடை வடிவேல், மகன் தினேஷ்குமார் என்கிற ஸ்டாலின்,30; பணத்தை வைத்திருந்த புதுச்சேரி பெரியார் நகர் தவமணி மகன் சிகாமணி,36; ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அலுவலகம் வழங்கிய வக்கீல் கைது:

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிகாமணி, வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். இந்த மோசடி கும்பல் தாங்கள் டிரேடிங் செய்வது போல், காட்ட, சிகாமணியின் அலுவலகத்தை பயன்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மூன்று பெண்கள் உட்பட நால்வருக்கு வலை:

கைதான வக்கீல் சிகாமணி, தனது உடன்பிறந்த அண்ணனான நெல்லித்தோப்பு அறிவுமணி(நெல்லிதோப்பு தொகுதி வி.சி.,நகர செயலாளர்) அவரது மனைவி சித்ராதேவி ஆகியோரிடம் மோசடி செய்த பணத்தை கொடுத்து வைத்துள்ளார். பணத்துடன் மாயமான கணவன் மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதே போல், சாப்பிட போவதாக ேஹண்ட் பேக்கில் பணத்தை எடுத்து சென்ற சென்னையை சேர்ந்த மீனாட்சி, ராஜேஸ்வரி ஆகியோரையும் தேடி வருகின்றனர்.

காவலில் விசாரிக்க முடிவு:

இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இதில் முக்கிய குற்றவாளிகளை, காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக நேற்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கான மனு இன்று விசாரணைக்கு வருகிறது. போலீஸ் காவல் கிடைத்தால், பல்வேறு தகவல்கள், விசாரைணயில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement