கடலை மிட்டாய் 'கேக்' ஆனது எப்படி? பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் அதிர்ச்சி

1

சென்னை: குழந்தைகள் தினத்தன்று, பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்க, அரசு தீர்மானித்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்த, கடலை மிட்டாய் நீக்கப்பட்டு, 'கேக்' இறுதி செய்யப்பட்டது, அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தைகள் தினத்தன்று, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும், 61 லட்சத்து 84,566 மாணவ-மாணவியருக்கு, 'கேக்' வழங்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், 'டெண்டர்' கோரி உள்ளது. இதில், மாணவர்களுக்கு, 45 கிராம் எடை கொண்ட, பல்வேறு வகையான 'கேக்' எந்தவித செயற்கை நிறமூட்டிகள் இல்லாமல், தயாரித்து வழங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகள் தினத்தன்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் செயல்பாட்டு கிடங்குகளில், பொருளை பெற்றுக்கொள்ளும்போது, அறிவிக்கப்பட்ட காலாவதி தேதியில், குறைந்தது 30 நாட்களாவது பொருள் சேதமடையாமல் இருக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு 'கேக்' வழங்கும் முடிவு, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

சமூகநலத்துறையின் கீழ் இயங்கும், அங்கன்வாடி மையங்களில், முன்பருவ கல்வி படிக்கும் குழந்தைகளின் பிறந்த நாளின்போது, சாக்லேட், கேக் வகைகள் வழங்கப்படாது. மாணவர்களின் ஆரோக்கியத்தை காக்கும் விதமாக, இந்த அறிவுறுத்தல்கள் உள்ளன. அதே நடைமுறைதான் பள்ளிகளிலும் பின்பற்றப்படுகிறது. அதற்கு மாற்றாக, கடலை மிட்டாய் உள்ளிட்ட இனிப்பு வகைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டது.

தற்போது, குழந்தைகள் தினத்தன்று, இனிப்பு வழங்குவது குறித்து, அரசு தரப்பில் கருத்து கேட்கப்பட்டது. அதிகாரிகள் சில பரிந்துரைகளை வழங்கினர். 'கேக்' மைதா வகையை சேர்ந்தது, அதற்கு பதிலாக கடலை மிட்டாய் அல்லது சத்துக்கள் நிறைந்த, சிறுதானியங்களில் செய்யப்பட்ட இனிப்புகளை வழங்கலாம் என தெரிவித்திருந்தனர்.

ஆனால், அரசு தரப்பில் 'கேக்' வழங்க முடிவு செய்யப்பட்டது. 'கேக்' செயற்கை நிறமூட்டிகள் கொண்டு தயாரிக்கப்படும். விரைவில் கெட்டு போகும் அபாயம் உள்ளது. எனவே, நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க, பல ரசாயனங்கள் பயன்படுத்தப்படும். இதையேதான் ஊட்டச்சத்து வல்லுநர்களும் தெரிவிக்கின்றனர். தங்கள் பரிந்துரையை ஏற்காமல், அரசு 'கேக்' வழங்குவது, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.



முதல்வரின் 'அன்பு பரிசு'



''குழந்தைகள் தினத்தன்று, தமிழகம் முழுதும், அரசு பள்ளி மாணவர்களுக்கு, முதல்வர் விஜய் சார்பில், 'கேக்' வழங்க வேண்டும் என, யோசனைகள் வழங்கப்பட்டு, அதற்கான பணிகள் நடக்கின்றன. இது, முழுதும் முதல்வரின் யோசனைதான். குழந்தைகள் காட்டும் அன்புக்கு பிரதிபலனாகத்தான், குழந்தைகளுக்கு 'கேக்' வழங்கப்பட உள்ளது. பள்ளிகளில், நன்றாக படிக்கும் குழந்தைகளை கொண்டாடுவர். ஆனால், அனைத்து குழந்தைகளையும் கொண்டாட வேண்டும் என்பதற்காக, முதல்வர் 'கேக்' வழங்குகிறார்''

- ராஜ்மோகன், அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை

Advertisement