கலப்படமான உணவு, தரமற்ற மருந்துகளுக்கு எதிரான போராட்டம் தொடரும்; துக்காராம் உறுதி

1

மும்பை: "மஹாராஷ்டிரா உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் பொறுப்பில் இருந்து நான் இடமாற்றம் செய்யப் படவில்லை; கலப்படமான உணவு, தரமற்ற மருந்துகளுக்கு எதிரான போராட்டம் தொடரும்" என துக்காராம் முண்டே தெரிவித்து உள்ளார்.

மூத்த ஐஏஎஸ் அதிகாரியான துக்காராம் முண்டே மஹாராஷ்டிர அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை மாற்றி அமைப்பதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதனால் துக்காராம் முண்டே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் துக்காராம் முண்டே வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: இல்லை, நான் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் பொறுப்பிலிருந்து இடமாற்றம் செய்யப்படவில்லை.

நான் மஹாராஷ்டிராவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் ஆணையராகப் பணியாற்றி வருகிறேன். கலப்படமான உணவு மற்றும் தரமற்ற மருந்துகளுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு துக்காராம் முண்டே கூறியுள்ளார்.

2005ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான துக்காராம் முண்டே, தனது 21 ஆண்டு காலப் பணியில் 25 முறைக்கும் மேலாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இடமாற்றம் செய்தாலும் தனது சமரசமற்ற நடவடிக்கை தொடரும் என துக்காராம் முண்டே உறுதியாக உள்ளார்.

Advertisement