அரசு முத்திரை, போலி சான்றிதழ்கள் தயாரித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ‘பலே’ மோசடி: எர்ணாவூரைச் சேர்ந்த 6 பேர் கும்பல் சிக்கியது
எண்ணுார்: எர்ணாவூர் பகுதியில் அரசு முத்திரைகள், போலிச் சான்றிதழ்கள் தயாரித்து, 10 ஆண்டுகளுக்கும் மேலாக மோசடியில் ஈடுபட்ட ஆறு பேர் கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, எண்ணுார் உதவி கமிஷனர் வெங்கட குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், திருவொற்றியூர், விம்கோ நகர் அடுத்த அம்பேத்கர் நகரில் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்தின்பேரில் அவ்வழியாக வந்த ஒருவரிடம் விசாரித்தபோது, அவரிடம் ஏராளமான போலிக் கல்விச் சான்றிதழ்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அம்பேத்கர் 4வது தெருவில் உள்ள அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு அரசு முத்திரைகள், சான்றிதழ்கள், ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவக் கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் போலி ஆவணங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதிரடி வேட்டை
சோதனையில் பல்வேறு அரசுத் துறைகளின் பெயரிலான போலி ரப்பர் முத்திரைகள், வங்கி காசோலைகள், ஆவணங்கள், சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிரபல தனியார் நிறுவனங்கள், கல்விக் குழுமங்களின் பெயரிலான முத்திரைகளும் சிக்கின.
கள்ளநோட்டு தயாரிப்பு
மேலும், மதுபாட்டில்களில் ஒட்டப்படும் கலால் துறையின், ‘ஹாலோகிராம்’ எனும் ஒளிரும் முத்திரைகளையும் தயாரித்து, போலி மதுபான விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 500 ரூபாய் நோட்டுகளைத் தயாரிப்பதற்கான போலி முத்திரைகளை உருவாக்கி, கள்ளநோட்டு அச்சடிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக எர்ணாவூர், எர்ணீஸ்வரன் நகரைச் சேர்ந்த கருணாகரன், 58, ஜெயகுமார், 38, ஜான்சன், 52, விக்டர், 48, கருணாநிதி, 58, சத்தியமூர்த்தி, 61, ஆகிய ஆறு பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவர்கள் தயாரித்த போலி ஆவணங்களைப் பயன்படுத்தி யாரேனும் அரசு வேலைக்குச் சேர்ந்துள்ளனரா என்பது குறித்தும், இந்த மோசடியில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு 3 கடைக்கு ரூ.15,000 அபராதம் விதிப்பு
-
அரளி பூ விலை உயர்வு
-
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி
-
யு.பி.ஐ., பண பரிவர்த்தனை மறைமுக வரி விதிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
-
பைக் மோதிய விபத்தில் நடந்து சென்றவர் பலி
-
கவர்னர் பதவியை ஆட்டு தாடியுடன் ஒப்பிட்ட திமுக அவரின் அதிகாரங்கள் குறித்து பேச துவங்கியது எப்போது?: ஐகோர்ட் கேள்வி