உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ்., மங்ரோல்' நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் கடற்படையில் சேர்ப்பு
மும்பை: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான, 'ஐ.என்.எஸ்., மங்ரோல்', நம் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக நேற்று இணைக்கப்பட்டது.
கேரளாவின் கொச்சியில் உள்ள, கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்ட இக்கப்பலை, நம் கடற்படையில் இணைக்கும் விழா மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் இன்று நடந்தது. மேற்கு கடற்படைப் பிரிவின் தலைமை தளபதியான துணை அட்மிரல் சஞ்சய் வத்சயன் தலைமைத் தாங்கி, ஐ.என்.எஸ்., மங்ரோல் நீர்மூழ்கிக் கப்பலை கடற்படை பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
எதிரி நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்களின் அச்சுறுத்தல்களை கண்டறிந்து, முறியடிக்கும் ஆற்றல் கொண்ட இக்கப்பலின் கட்டுமானத்தில், மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக, 80 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுப் உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இக்கப்பலின் நீளம் 256 அடி, அகலம் 37 அடி. மங்ரோல் கப்பலின் மிதவை ஆழம் மிகக்குறைவு என்பதால், பெரிய போர்க்கப்பல்கள் செல்ல முடியாத ஆழமற்ற கடலோரப் பகுதிகளிலும் இது எளிதில் சென்று கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
'வாட்டர்ஜெட்' உந்துவிசை கொண்ட மூன்று டீசல் இன்ஜின்கள் மூலம் இக்கப்பல் இயங்குவதால், கடற்பரப்பில் அதிகபட்சமாக 25 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது. மேலும், இது மிகக் குறுகிய வளைவுகளிலும் வேகமாகத் திரும்பும் திறன் கொண்டது.
இதுதவிர, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன சோனார் எனப்படும் ஒலி அலைகளின் மூலம் நீருக்கு அடியில் பதுங்கி இருக்கும் எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களை துல்லியமாக கண்டறிய முடியும். இதேபோல் கடலின் ஆழமான பகுதிகளில் இருந்து வரும் ஒலிகளையும் எதிரொலிகளையும் மிகத் துல்லியமாக கண்காணிக்கும் வசதி இதில் உள்ளது.
எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களை நீருக்கு அடியிலேயே குறிவைத்து அழிக்கும், 'டார்பிடோ' ஏவுதளங்கள், குறுகிய தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்க உள்நாட்டுத் தயாரிப்பு ராக்கெட் லாஞ்சர்கள் இக்கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.
எதிரி நாட்டின் நீர்மூழ்கிக் கப்பல்கள், மங்ரோல் போர்க்கப்பலை நோக்கி டார்பிடோ ஏவுகணைகளை ஏவினால், அதைத் திசை திருப்பி கப்பலுக்கு பாதுகாப்பு அளிக்கும் அதிநவீன தற்காப்பு தொழில்நுட்பம் இதில் நிறுவப்பட்டுள்ளது. எதிரி ரேடார்களின் கண்ணில் எளிதில் படாதவாறு இதன் வெளிப்புறம் நவீன தொழில்நுட்ப முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
தமிழகத்திற்கு நீர் விடுவிப்பது கடினம்; காவிரி விவகாரத்தில் கர்நாடகா பிடிவாதம்
-
பாஜ ஆட்சிக்கு வந்தபின் முதல் நவராத்திரி : மேற்கு வங்கம் முழுவதும் விழாக்கோலம்
-
கலப்படமான உணவு, தரமற்ற மருந்துகளுக்கு எதிரான போராட்டம் தொடரும்; துக்காராம் உறுதி
-
அரசு முத்திரை, போலி சான்றிதழ்கள் தயாரித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ‘பலே’ மோசடி: எர்ணாவூரைச் சேர்ந்த 6 பேர் கும்பல் சிக்கியது
-
‘மனதுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து சாதிக்கணும்’
-
'கிரானைட்' வீரமணி வழக்கு: கூடுதல் டிஜிபி அருணிடம் விசாரணை