உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியல்: வேளாண் பல்கலை பேராசிரியர்கள் தேர்வு

1

கோவை: உலகின் தலைசிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில், தமிழ்நாடு வேளாண் பல்கலையை சேர்ந்த நான்கு பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலை மற்றும் எல்சிவியர் ஆய்விதழ் நிறுவனம் இணைந்து, உலக அளவில் அதிக ஆய்வு மேற்கோள்களை பெற்ற விஞ்ஞானிகளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றன.

ஆய்வுக் கட்டுரைகளுக்குக் கிடைத்த மேற்கோள்கள், எச்-இண்டெக்ஸ், எச்.எம்.-இண்டெக்ஸ் உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். நடப்பாண்டு பட்டியலில், 20 அறிவியல் துறைகள் மற்றும் 174 துணைத் துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர்.

இதில், தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் (பொறுப்பு) ரவீந்திரன், முன்னாள் ஆராய்ச்சி இயக்குனர் சுப்ரமணியன், வேளாண் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் சிவகுமார், வேளாண் பயிர் வினையியல் துறை பேராசிரியர் ஜனகிராமன் ஆகிய நான்கு பேர் இடம் பிடித்துள்ளனர்.

ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் அவற்றுக்கு கிடைத்த மேற்கோள்களின் அடிப்படையில் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு பல்கலையை சேர்ந்த இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் நான்கு பேர் இடம் பெற்றிருப்பது பல்கலையின் ஆராய்ச்சி தரம் மேம்பட்டுள்ளதை காட்டுகிறது என வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement