ஐ.நா. மனித உரிமை அமைப்புகள் இரட்டை நிலைபாட்டை தவிர்க்க வேண்டும்; இந்தியா வலியுறுத்தல்

-நமது நிருபர்-

ஐ.நா. மனித உரிமை அமைப்புகள் அரசியல்மயமாக்கலையும் இரட்டை நிலைப்பாடுகளையும் தவிர்க்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி உள்ளது.

வன உரிமைச் சட்டத்தின் கீழ் கணிசமான எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் தீர்க்கப்படாமல் உள்ளன என்று ஐ.நா. மனித உரிமை அமைப்புகள் அறிக்கையில் கூறியிருந்தது. இது தொடர்பாக ஐநா கூட்டத்தில், இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் செயலாளர் அனுஜ் ஸ்வரூப் பேசியதாவது:

ஐநா மனித உரிமைகள் அமைப்புகள், கலாசார மற்றும் வரலாற்றுப் பின்னணியை மதித்து, அரசியல்மயமாக்கலையும் பாரபட்சத்தையும் கடந்து, உலகிற்கு ஒரு பாரபட்சமற்ற தார்மீக வழிகாட்டியாகத் திகழும் என்று நாங்கள் நம்புகிறோம். ஐ.நா. மனித உரிமை அமைப்புகள் அரசியல்மயமாக்கலையும் இரட்டை நிலைப்பாடுகளையும் தவிர்க்க வேண்டும்.

பாகுபாடு மற்றும் இரட்டை நிலைப்பாடுகள் இன்றி அனைவருக்கும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் மற்றும் அவரது அலுவலகத்துடன் இந்தியா தொடர்ந்து இணைந்து செயல்படும். இவ்வாறு அனுஜ் ஸ்வரூப் பேசினார்.

சமீபத்தில் டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து காவலில் வைத்தது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பு தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் உள்விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளை தவிர்க்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Advertisement