தொழில்துறையினரின் கனவு நனவாக ஒற்றுமையே தீர்வு! வாரியம் அமைப்பதில் இடர் நீங்குமா?

திருப்பூர்: திருப்பூருக்கு என தனி பின்னலாடை வாரியம் வேண்டும் என்பது 20 ஆண்டு கனவு. தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிப்பை வெளியிட்டு, திருப்பூரை தலைமையிடமாக கொண்டு வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பதவிப் பகிர்வில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. கனவு கைக்கு எட்டும் நேரத்தில், பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு கண்டு அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைய வேண்டும் என மூத்த தொழில்துறையினர் வலியுறுத்துகின்றனர்.

வளர்ந்த நகரம்



திருப்பூர் என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தொழில் நகரம் அல்ல. சிறு உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர், தொழிலாளர்களின் உழைப்பில் படிப்படியாக வளர்ந்தது. இன்று உள்நாட்டு சந்தை முதல் சர்வதேச ஏற்றுமதி வரை, நுாற்பு, பின்னல், சாயம், அச்சு, தையல், பேக்கிங் என ஒன்றோடொன்று பின்னிய வாழ்வாதார சங்கிலி.



நீண்ட கோரிக்கை



இந்த பரந்த கட்டமைப்பின் குரலை ஒருங்கிணைத்து அரசிடம் ஒலிக்க தனி வாரியம் வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்தது. பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்களிலும் இது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

வாரிய நகர்வு



இந்த சூழலில் தான் தமிழ்நாடு பின்னலாடை வாரியம் அமைக்கப்படும் என அறிவிப்பு வந்தது. ஜவுளித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, அரசு மற்றும் தொழில் தரப்பு பிரதிநிதிகள் அடங்கிய வாரியம் அமையும் என தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து ஜவுளித்துறை கமிஷனர் காணொலி வாயிலாக தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசித்து வாரியத்தின் உத்தேச வடிவம் குறித்து விவாதித்தார். ஆனால் கடந்த சில வாரங்களாக பதவிகளை பகிர்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தொழில் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மூத்த குரல்



மூத்த தொழில்துறையினர் கூறியதாவது: திருப்பூரின் 20 ஆண்டு கனவுக்கு அரசு உயிர் கொடுத்துள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும். வாரியம் என்பது பதவி அல்ல, அனைத்து தரப்பின் தேவையை பிரதிபலிக்கும் கண்ணாடி. பெரிய ஏற்றுமதி நிறுவனம், குறு ஏற்றுமதியாளர், உள்நாட்டு உற்பத்தியாளர், சாயம், பிரின்டிங், நிட்டிங் என ஜாப் ஒர்க் நிறுவனம் வரை ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை உண்டு. அதை ஒரே குடையில் அரசிடம் கொண்டு செல்லும் வாய்ப்பு தான் இந்த வாரியம்.

பதவியில் முரண் இருக்கலாம். அதற்காக வாரிய முயற்சி பாதிக்கக்கூடாது. பரஸ்பரம் பேசி சுமுக தீர்வு எட்ட வேண்டும். ஒற்றுமையே பலம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீண்ட காலமாக எதிர்பார்த்த வாய்ப்பு கைக்கு வந்துள்ள நிலையில், தனிப்பட்ட பதவிகளை விட ஒட்டுமொத்த தொழில்துறையின் எதிர்காலமே முக்கியம் என்பதே திருப்பூரின் இப்போதைய குரலாக உள்ளது.

Advertisement